பெண்ணெழுத்து 9


©தமிழ்பக்கம்

உலகம் தகவல் தொழில்நுட்ப புரட்சியில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி விட்டதாக கூறுகிறோம். உலகம் கைக்குள் அடங்கிவிட்டதாக கூறுகிறோம். நவீன இலத்திரனியல் சாதனங்களின் அறிமுகம் வாழ்க்கையை இலகுவாக்கிவிட்டது, மனிதர்களிற்கிடையிலான நிலஇடைவெளிகள் காணாமலேயே போய் விட்டதென்கிறோம். மகிழ்ச்சி. ஆனால் இதற்கு ஒரு பக்கம் மட்டும்தான் உள்ளதா?

நிச்சயமாக இல்லை. எதற்கும் எதிர்மறையான விளைவுகளும் இருக்குமென்பதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. தொழில்நுட்ப சாதனங்கள் மனிதர்களிற்கிடையிலான எல்லைகளை இல்லாமலாக்கிவிட்டது என்பதற்கு இன்னொரு அர்த்தம், மனிதர்கள் தொழில்நுட்ப சாதனங்களின் கண்களிலிருந்து தப்பிக்க முடியாது என்பதும்.

சிசிரிவி கமரா பற்றி பேசுகிறோம். யாருமற்ற இடங்களில் நடந்த குற்றமொன்றை கண்காணிப்பு கமரா காட்டுக் கொடுக்கிறது. நித்தியானந்தாவின் படுக்கையையும் உலகிற்கு காட்டுகிறது. த்ரிஷா குளியறையில் குளித்ததையும் காட்டுகிறது. யாரோ ஒரு அப்பாவி பெண் விடுதியில் குளித்து உடைமாற்றியதையும் உலகிற்கு காட்டுகிறது.

தொழில்நுட்பத்திற்கு கண்முளைத்தது எவ்வளவு ஆபத்தானதென்பதற்கு இது உதாரணம். கண்முளைத்த தொழில்நுட்பம் மட்டும்தான் என்றல்ல, தொழில்நுட்பத்தின் அனைத்து விதமான கூறுகளையும் பெண்களிற்கெதிரான குற்றங்களிற்காக பயன்படுத்துகிறார்கள்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புக்கள், பணமீட்டலில் ஒரு சாரார் ஈடுபட இன்னொரு சாரார் தொழில்நுட்பத்தின் சாதகங்களை எப்படி பெண்களிற்கெதிராக பயன்படுத்துவது என்பதிலேயே மண்டையை உடைக்கிறார்கள். வெளிப்படையாக சொன்னால், மிகப்பெருமளவான ஆண்கள் இப்படித்தான். எவ்வளவுதான் முற்போக்கானவர்கள், அறவுணர்வு கொண்டவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எப்பொழுது மனதிற்குள் ஒளிந்திருக்கும் மிருகம் வெளிக்கிளம்புகிறது என்பதுதான் விவகாரம்.

மனஸ்தாபத்தால் பரிந்த காதலி வேறொரு திருமணம் செய்ய தயாராகும்போது, பழைய புகைப்படங்களை அனுப்பி அவளது திருமணத்தை குழப்பிய ஆண்கள் எத்தனை பேர்? யாராவது ஒரு பெண் சிக்கலாம் என தொலைபேசியில் தெரியாத இலக்கங்களிற்கு அழைப்புக்களை ஏற்படுத்தியவர் எத்தனைபேர்? பேஸ்புக்கில் சற்றிங்கில் தொல்லை கொடுத்து, பழைய சற்றிங் கிஸ்ரறியை வைத்து மிரட்டுபவர்கள் எத்தனை பேர்? இப்படி இந்த பட்டியல் நீளமானது.

பெண்கள் தொலைபேசி வைத்திருப்பதே அச்சப்படும் ஒரு காரியமாகிவிட்டது. ஒரு பெண்ணை குறிவைக்கும் ஆண்கள், அவள் தொலைபேசி வைத்திருக்கிறாளா, பேஸ்புக் எக்கவுண்ட் வைத்திருக்கிறாளா, வட்ஸ்அப்பில் இருக்கிறாளா என்பதைதான் முதலில் பார்க்கிறார்கள். அதனால்த்தான் நமது சமூகத்தில் பெண்களும் தொழில்நுட்பமும் சற்று எச்சரிக்கையுடன் இணைந்திருக்கிறார்கள்.

சாதாரணமாக ஒருத்தி பேஸ்புக்கில் தனது படத்தை போட முடியாது. திருமணத்தின் பின்னர் அல்லது காதல் அமைந்து காதலனின் சம்மதத்துடன்தான் பெரும்பாலான பெண்கள் தமது படங்களை பதிவேற்றுகிறார்கள். அலுவலக படங்கள் பதிவேற்றுவதற்கே நிறைய தயங்கி பின்னர் காதலனின் சம்மதத்தை பெற்று பதிவேற்ற சம்மதம் சொல்லும் நிறைய பெண்களை கண்டிருக்கிறேன்.

சாதாரணமாக நமது பெண்கள் திருமணத்தின் முன் பேஸ்புக் புரபைல் பிக்சரை பூவாகவோ, நடிகையாகவோ வைத்திருப்பதும் இதனால்த்தான். தொழில்நுட்பத்தின் கண்கள் பெண்களை வேட்டையாடும் வழிகளை ஆண்களிற்கு இலகுவாக்கி கொடுத்துள்ளது. இருபதுகளில் பெண்கள் ஏதாவது மிகமுக்கிய அலுவல் என்றால் கூட தமது தொலைபேசி இலக்கத்தை இன்னொருவரிடம் கொடுப்பதே ஆபத்தானது என்றாகிவிட்டது. அப்பா, சகோதரனின் இலக்கத்தைதான் பெரும்பாலானவர்கள் கொடுக்கிறார்கள்.

தொழில்நுட்பம் எவ்வளவு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும், பெண்களை பொறுத்தவரை கத்தியில் நடக்கும் விடயம்தான். கரணம் தப்பினால் மரணம். பெண்களிற்கு எதிராக தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடக்கும் வன்முறைகள் பெருகிவிட்டன. ஆனால், அதற்கு முறையான தண்டனை கிடைக்கிறதா என்றால் கிடையாது.

இலங்கையின் எல்லா பிரதேச காவல்நிலையங்களிலும் இணையத்தள குற்றங்களிற்கு உடன் பரிகாரம் பெற முடியாது.குறிப்பாக வடக்கு, கிழக்கில் நிலைமை மோசம். வடக்கு கிழக்கில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இணையத்தளங்கள், பேஸ்புக்கால் பாதிக்கப்படும் பெண்கள் உள்ளனர்.

அண்மையில் வடமராட்சியை சேர்ந்த யுவதியொருவரின் நிர்வாண புகைப்படங்களை ஒருவன் முகப்புத்தகத்தில் பதிவேற்றினான். சைபர்குற்றங்களை கண்டுபிடிக்க இங்கு வசதியில்லாதது ஒருபுறமிருக்க அவன் வெளிநாட்டில் இருந்தால் தப்பித்துக் கொண்டான். இரண்டு தனிநபர்களிற்கிடையில் என்னதான் பிரச்சனை எழுந்தாலும், அதற்கு தீர்வு இது கிடையாது.

நமது சமூகத்தில் புதிய பேராபத்தாக எழுந்துள்ளது முறையற்ற ஊடகவியலாளர்களிடம் சிக்கியுள்ள இணைத்தளங்கள். யாரும் இணையத்தளம் தொடங்கலாமென்ற வாய்ப்பு பல அரைகுறைகளை ஊடகவியலாளர்களாக்கிவிட்டது. இவர்கள் அனைவரது ஊடகவியலும், பெண்களின் அந்தரங்கத்தை குறிவைத்ததே. யாழ்ப்பாணத்தை கலக்கும் பதினெட்டு வயது விபச்சாரி இவள், வவுனயாவில் வளைத்துப்போடும் குருமன்காட்டு குட்டி என்ற தோரணையில் கொச்சை செய்திகளை வெளியிடுகிறார்கள். உலகின் ஆதித்தொழிலான பாலியல்தொழில் பல நாடுகளில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழில் பற்றிய பார்வைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்குள் நாம் புகவில்லை. எனது கேள்வி, பாலியல் தொழிலில் ஒரு பெண் மட்டமுா சம்மந்தப்பட்டுள்ளாள்? ஆண்களில் அதில் பங்கில்லையா?

பாலியல் தொழிலாளியென ஒரு பெண்ணை அம்பலப்படுத்துவதில் நமது கலாசார காவலர்களான ஆண்களில் உள்ள வேகம், அவளிடம் செல்லும், பாலியல் தொழிலாளிகளையே நாடிச் சென்றுகொண்டிருக்கும் ஆண்களை என் அம்பலப்படுத்துவதில்லை. ஒவ்வொரு பாலியல் வன்புணர்வு சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மாத்திரம் ஏன் காண்பிக்கிறார்கள்? குற்றவாளிகளான ஆண்களை ஏன் காண்பிப்பதில்லை?

சிலகாலத்தின் முன்னர் கிருத்திகா என்ற யுவதியை பற்றி யாழ்ப்பாண இணையத்தளம் ஒன்று ஆபாச செய்தி வெளியிட்டிருந்தது. அது அருவருக்கத்தக்க விடயம். யேசுநாதர் சொன்னதுதான் இந்த இடத்தில் பொருத்தமானது. பெண்கள் மீது சகட்டுமேனிக்கு கல்லெறியும் எல்லோரும் யோக்கியர்களா?

ஒரு பெண் பாலியல் தொழில்தான் செய்கிறாள் என்றாலும், அதனை சமூகவலைத்தளங்களில், இணையத்தளங்களில் பதிவேற்ற யாருக்கும் உரிமை கிடையாது. சட்டத்தில் அதற்கு இடமில்லையென்பதைவிட அது அறமுள்ள காரியமுமல்ல.

எப்படி வாழ வேண்டுமென்பதை தீர்மானிப்பது ஒவ்வொருவரின் தனிஉரிமை. அதை வெளியாட்கள் தீர்மானிக்க முடியாது. இதன் அர்த்தம் பாலியல் தொழிலை ஊக்கப்படுத்துவதல்ல. அது சட்டப்படி தவறானால் அதை கையாள முறையான பொறிமுறையுள்ளது.

தனிமனிதர்களிற்கு அந்த உரிமை கிடையாது. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமாக வாழ்வார்கள். ஒருவரின் வாழ்க்கைமுறை இன்னொருவருக்கு உவப்பில்லாததாக இருக்கும். ஒருவன் புகைபிடிப்பான், இன்னொருவன் மது அருந்துவான், இன்னொருவன் வீதியில் செல்லும் பெண்களை கேலி செய்வான், இன்னொருவன் கூட்டத்தில் பெண்களை உரசுவான். இதெல்லாம் பெண்களிற்கு பிடிப்பதில்லைதான். இந்தவகையானவர்களையெல்லாம் அம்பலப்படுத்துகிறோம் என பெண்களும் புறப்பட்டால் நிலைமை என்னவாவது?

பொதுவாகவே நமது சமூகத்தில் பெண்கள் பற்றிய பார்வையில் நிறைய போதாமைகள் உள்ளன. அவசரகதியிலான சமூக ஊடகத்தில் இயங்கும் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முழுமையான பார்வை கொண்டவர்கள் அல்ல. எவ்வளவுதான் படித்த சமூகம் என யாழ்ப்பாணத்தவர்கள் மார்தட்டினாலும் பெண்கள் உரிமை, பெண்கள் தொடர்பான பார்வையில் மிகக்கீழ்மட்டத்திலேயே யாழ்ப்பாணம் உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இணையத்தள குற்றங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்கள் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்புத்தான் என்கிறார்கள் பெண்கள் அமைப்பினர். இந்த மாவட்டங்களில் பெண்களிற்கு எதிரான குற்றங்கள் பெருகிச் செல்வதால், விழிப்புணர்வு கூட்டங்களை அங்கு ஏற்பாடு செய்ததாக யாழ் மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நம்மவர்களின் பார்வையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியதுதான் இப்பொழுதுள்ள அவசரதேவை. பெண்களிற்கெதிரான விழிப்புணர்வின் ஓரு அங்கமாக, சமூகத்தில் பெண்கள் தொடர்பில் நிலவும் அபிப்பிராயங்களில் மாற்றங்களை கொண்டுவருவதும் அவசியம்.

(இன்னும் எழுதும்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here