சபாஷ் சரியான போட்டி- நான்தான் அமைச்சர்; நாளை சந்திப்பிற்கு வாருங்கள்: அதிகாரிகளிற்கு டெனீஸ்வரன் கடிதம்!

மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராக தானே உள்ளதாகக் குறிப்பிடும் பா.டெனீஸ்வரன், தனது அமைச்சின் கீழ் வரும் மாகாண திணைக்களின் தலைவர்களை நாளை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வடமாகாண கிராமிய அபிவிருத்திப் பணிப்பாளர், வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் மற்றும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கே அவர் இந்த அழைப்புக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

டெனீஸ்வரனின் துறைகளில், போக்குவரத்து அமைச்சு முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரனிடம் உள்ளது. வர்த்தக வாணிப அமைச்சு, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் – விநியோகம் -தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் அமைச்சர் அனந்திர சசிதரனிடம் உள்ளது.

மீன்பிடி அமைச்சு, விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசனிடம் உள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் கடிதத் தலைப்பிலேயே பா.டெனீஸ்வரனால் இன்று இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமது கட்டளையை தவிர வேறு யாருடைய கட்டளைகளையும் ஏற்ககூடாதென அந்த கடிதத்தில் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

எனினும்- பா.டெனீஸ்வரனின் கீழ் இயங்கியபோது, மீன்பிடி திணைக்களம் என்பது பெயரளவிலேயே இருந்தது. அது திணைக்களமாக இயங்கவில்லை. அதற்குரிய ஆளணியும் இல்லை. திணைக்கள பணிப்பாளரும் இல்லை. முதலமைச்சர், அனந்தியின் கீழ் செயற்படும் திணைக்களங்களின் அதிகாரிகள் அவரது அழைப்பை ஏற்பதா இல்லையா என்பதில் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here