கவர்ச்சி அறிவிப்புகள் இல்லாத பட்ஜெட்: தமிழக சட்டசபையில் தாக்கல்

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இல்லை. அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கான உதவித்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற்று உள்ளன.

2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்காக நிதி இலாகா பொறுப்பை கவனிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 9.57 மணிக்கு சட்டசபைக்கு பட்ஜெட் புத்தகம் அடங்கிய சூட்கேஸ் பெட்டியுடன் வந்தார். அவருடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார்.

அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்தனர். ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த சூட்கேஸ் பெட்டியில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் ஒட்டப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

சரியாக காலை 10.01 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். தொடர்ந்து, 3 மணி நேரம் 16 நிமிடங்கள் வாசித்த அவர், மதியம் 1.17 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார்.

பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஏற்கனவே, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டு இருந்த திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது என்றாலும், குறிப்பிடும் படியான சில அறிவிப்புகளும் இடம் பெற்று இருந்தன.

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) மாநில அரசின் கடன் திட்டமிடல் ரூ.62,757 கோடியாக இருக்கும் என்ற நிலையில், அதில் ரூ.59,209 கோடியை மட்டும் கடனாக பெற தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதன்மூலம் நடப்பு நிதி ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் உரையில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நிர்பயா நிதியத்தின் மூலம் ரூ.77.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படும். ரூ.1,580 கோடி செலவில் புதிதாக 2,213 பஸ்கள் வாங்கப்படும். இதற்கான முதற்கட்ட நிதி ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடம் இருந்து பெற திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.

* இயற்கை மரணங்களில், தற்போது வழங்கப்படும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாகவும், விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூ.4 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. விபத்தில் நிரந்தர ஊனமுற்றோருக்கான உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

* இந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 10,276 சீருடை பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

* நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப்பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

* ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தொடர்புகொள்ளவும், கண்காணிக்கவும் இஸ்ரோ உதவியுடன் டிரான்ஸ்பாண்டர் என்ற நவீன கருவி உருவாக்கப்பட்டு, இதுவரை 507 விசைப்படகுகளில் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் ரூ.18 கோடி செலவில் இந்தக் கருவி பொருத்தப்பட இருக்கிறது.

* அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசன திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு பெற்று இருக்கிறது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதேபோல், காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகளும், முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகளும் இந்த ஆண்டு கட்டித்தரப்படும்.

* பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வரும் ஆண்டில் 1,12,876 தனி வீடுகளும், 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் கட்டப்படும்.

* சென்னையில் மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்- கோயம்பேடு இடையேயான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ரூ.3,100 கோடி ஒதுக்கப்படுகிறது.

* தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை ரூ.3,575 கோடி மொத்த மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு பெற்று உள்ளது. இதற்காக, ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* குவைத் நாட்டைச் சேர்ந்த அல் கெப்லா அல் வட்யா குழுமம், தூத்துக்குடி அருகே பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகத்தை ரூ.49 ஆயிரம் கோடி செலவில் அமைக்கும்.

* சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.563½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இதேபோல் ரூ.9.80 கோடி செலவில் ராமேசுவரத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு.

* தமிழக திறன் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

* 2019-2020-ம் ஆண்டில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 10,242 காவல் துறை பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் மின்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.450 கோடி ஒதுக்கீடு.

* கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* வேளாண்மை துறைக்கு ரூ.11,894.48 கோடி ஒதுக்கீடு.

* கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.

* ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர், மாநிலத்தின் எந்தவொரு நியாய விலைக்கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

* உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் ரூ.5,344 கோடியாக உயர்வு.

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தில் 50 சதவீதத்தை ஈடு செய்ய ரூ.4,265.56 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.667.08 கோடி ஒதுக்கீடு

மேற்கண்ட அம்சங்கள் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் இடம் பெற்று உள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here