மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமை வாய்ந்தவை என கண்டுபிடிப்பு

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 20 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்நிலையில் இதன்போது மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது சில எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை (07) மாங்குளம் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவரினால், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பில் அதே நாளில் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தை நீதவான் கடந்த புதன்கிழமை (12) ஆய்வு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நீதவான் உத்தரவின் பேரில், கிளிநொச்சி மருத்துவமனையின் நீதிமன்ற விசேட மருத்துவ நிபுணரினால் நேற்றையதினம் (13) காலை 10.00 மணிக்யளவில் அவ்விடம் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதோடு, அதன்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1998ம் ஆண்டில் இருந்து 1999ம் ஆண்டின் பிற்பகுதி வரையும் மாங்குளம் நகரம் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளிற்குமிடையிலான முன்னரங்க யுத்த முனையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here