தமிழ் அரசு கட்சியின் முயற்சிகள் தோல்வி; யாழ் அரச அதிபர் ஓய்வு: பிள்ளையானின் உறவினர் புதிய அரச அதிபர்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அவர் ஒய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக மகேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள நா.வேதநாயகன், இரண்டு மாதங்கள் முன்னதாகவே பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். யாழ் மாவட்ட அரச அதிபர் பொறுப்பிலிருந்து இடமாற்றம் வழங்கப்பட்டு, அமைச்சிற்கு இடமாற்றப்பட்டதையடுத்தே அவர் இந்த முடிவை எடுத்தார்.

இதேவேளை, யாழ் மாவட்ட அரச அதிபரை ஓய்வு வரை இடமாற்றம் செய்ய வேண்டாமென இலங்கை தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்கவில்லையென அறிய முடிகிறது.

யாழ் அரச அதிபர் நா.வேதநாயகன் தமிழ் அரசு கட்சி சார்பானவராக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தார். கடந்த அரசின் இறுதிக்காலப்பகுதியில் ரணில் அமைச்சின் நிதித்திட்டங்கள் யாழில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரனால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ரணில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ் அரச அதிபர் நா.வேதநாயகன் ஆகியோர் மீது கூட்டமைப்பின் எம்.பிக்களே அதிருப்தியடைந்திருந்தனர்.

மாவை, சுமந்திரன் சார்பாக அவர் செயற்பட்டு வருவதாக கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் உள்சுற்று பேச்சுக்களில் அதிருப்தி தெரிவித்த சம்பவங்களை தமிழ்பக்கம் அறிந்திருந்தது. எனினும், அது குறித்த பகிரங்க அபிப்பிராயங்களோ, குற்றச்சாட்டுக்களோ யாராலும் எழுப்பப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பை சேர்ந்த மகேசன் புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையானின் உறவினராக இவர், மட்டக்களப்பின் மேலதிக அரச அதிபராகவும், பின்னர் அமைச்சிலும் கடமையாற்றி வந்தார். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் களமிறங்கி, வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளராக பதவிவகித்து  வருகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here