பொன்சேகாவிற்காக பிரச்சாரம் செய்தவர்கள்தான் கஜேந்திரனும், பத்மினியும்; கதிரைக்காக உருவான கட்சியது: சிறிகாந்தா விளாசல்!

நாற்காலிகளிற்காக உருவாக்கப்பட்ட கூட்டணியென தமிழ் மக்கள் கூட்டமைப்பை விமர்சனம் செய்த தமிழ்தேசிய மக்கள் முன்னணி, முக்காலிகளிற்காக உருவானதா? தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆசனம் ஒதுக்கவில்லையென்பதால் உருவான கட்சி அது என கஜேந்திரகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா.

யாழில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தம்மை விமர்சனம் செய்த சட்டத்தரணி சுகாஸ், மாவை சேனாதிராசா ஆகியோருக்கும் வாயடைக்கும் விமாக சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அமைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பல கட்சிகள் எம் மீது விமர்சனங்களை வைத்துள்ளன. இந்த கட்சிகள் தெரிவித்திருக்கும் வாழ்த்துக்களாகவே நாம் இதை எடுத்துக் கொள்கிறோம். இருந்தாலும், ஒரு தமிழ் கட்சியின் தலைவர் இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சொல்லியுள்ளார். அதே பாணியில் நாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அது எமது வழக்கமல்ல. வேறு ஒரு தமிழ் அரசியல் கட்சியின் தலைவரும், வேறு இரண்டு பிரமுகர்களும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்லியுள்ளனர்.

தமிழ் தேசிய பரப்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும், தமிழ் மக்களின் நலனிற்காக ஒன்றுபட வேண்டுமென பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, நான்கு கட்சிகள் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியாக உருவெடுத்துள்ளன. வெளியிலுள்ள கட்சிகளில், தமிழ் அரசு கட்சி தவிர்ந்த மற்றைய இரண்டு கட்சிகளும் எந்த நேரமும் இங்கு வரலாமென்பதற்காக எமது கதவுகள் அகலத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

எம் மீது சுமத்தப்பட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பாக சில உண்மைகளை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் இந்த கூட்டணி உறுதியாகவுள்ளது. இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய மக்கள் மத்தியில் உள்ள அற்ப சொற்ப அரசியல் வேறுபாடுகளை துடைத்து, ஒரே இலக்கு நொக்கி அவர்களை அணி திரட்டலாமென்ற நம்பிக்கையில்தான இந்த கூட்டணியை நிறுவியிருக்கிறோம்.

தமிழ் தேசிய தலைமையை பெற ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் போட்டியிடுவதும், ஜனநாயக ரீதியில் மோதிக் கொள்வதும், மக்களிற்கு ஜனநாயகரீதியில் பல தெரிவுகளை வழங்குகிறதென்பதையும், மக்கள் சரியான தெரிவை மேற்கொள்ள சந்தர்ப்பத்தை வழங்குகிறதென்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்கிறார், அவர்களுடைய கொள்கைகளை முன்வைத்து, அவர்களது கூடாரத்தை காலி செய்ய முயற்சிப்பதாக சொல்லியுள்ளார். அத்தகைய தேவை எமக்கில்லை. அந்த கூடாரம் விரைவில் காலியாகி விடுமென்பது எமக்கு தெரியும். தெனால் அவர்களை பற்றி பெரிதாக பேசவில்லை.
அது மட்டுமல்ல, நாற்காலிகளிற்காகத்தான் இந்த கூட்டணியென்றும் அந்த முன்னணி சொல்லியுள்ளது. நாங்களும் கேட்க முடியும், நாற்காலிகளிற்காக நாங்களென்றால், நீங்களென்ன முக்காலிகளிற்காக அரசியல் செய்கிறீர்கள் என கேட்க முடியும். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அதை கேட்கவில்லை. மக்கள் அதை முடிவெடுப்பார்கள்.

அதேவேளை, தமிழ் தேசிய தலைமையை தமது பரம்பரை சொத்தாக கருதிக் கொண்டிருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பை நாசமாக்கிய கட்சி, ஒற்றுமையின் பெயரால் கோசமெழுப்பிக் கொண்டிருக்கிறது.

எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ, அந்த கொள்கைகள் தூக்கி வீசப்பட கூடாது என்ற தவிப்போடும், துடிப்போடும்தான் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளொம்.

ரெலோவை விட்டு நானும், சிவாஜிலிங்கமும் மூன்று முறை வெளியேறிவிட்டதாகவும், பின்னர் சேர்ந்ததாகவும் தம்பியொருவர் இரண்டொரு தினத்திற்கு முன்னர் ஒற்றை மைக்கின் முன்னால் உட்கார்ந்திருந்தபடி பேசியிருந்தார்.

2010ம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் 20 பேரில் 8 பேரின் எதிர்ப்பை மீறி பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவானது. அந்த எட்டுப் பேரில் ரெலோவின் நான்கு உறுப்பினர்களும், கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி மற்றும் வன்னி எம்.பி கிசோர் என எட்டுப் பேர் அதை எதிர்த்து வாக்களித்தோம்.
மறுநாள், இந்த முடிவை அறிவிக்க சம்பந்தன் கூட்டிய மாநாட்டை நாம் புறக்கணித்தோம். ஆனால் கஜேந்திரகுமார் அந்த மேடையில் இருந்தார். பின்னர் பொன்சோவை ஆதரித்து கஜேந்திரனும், பத்மினியும் கூட்டத்தில் பேசினார்கள்.

இதன்பின்னர், நடந்த பொதுத் தேர்தலில் கஜேந்திரகுமாரிற்கு ஆசனம் வழங்கலாமென்றும், கஜேந்திரன், பத்மினிக்கு நியமனம் வழங்க முடியாதென்று சம்பந்தன் தெரிவித்தார். அதன் எதிரொலிதான் இந்த மூவரும் கூட்டமைப்பை விட்டு வெளியேறிதன் காரணம். அதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் வெளியேறியதற்கு ஒரேயொரு காரணம், நாடாளுமன்ற நாற்காலிகள் மறுக்கப்பட்டமு என்பதுதான். எமக்கந்த பிரச்சனையில்லை. நாம் சம்பந்தனிடம் ஆசனம் கேட்கவில்லை.

தமிழ் தேசிய மக்கள் கூட்டணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெறும் வரவேற்பு பலரது நித்திரையை குழப்பியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here