அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறக்கப்பட்ட பக்கம்

♦ தமிழ்செல்வன்

முன்னாள் யாழ் மாவட்ட எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாவது ஆண்டு நினைவுநாள் கடந்த மாதம் அனுட்டிக்கப்பட்டது. அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நினைவுநாள் நிகழ்வில் பலர் உரையாற்றிய போதும், அவரைப்பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. கொஞ்சம் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நினைவுநாள், நிறைய அரசியல் மேடையாக- வழக்கமான தமிழ் மேடையாகவே அது முடிந்தது.

பொதுவாகவே நமது சமூகத்தில் ஒரு இயல்புண்டு. மரணமடைந்தவர்களை அதீத மேன்மைப்படுத்தியே பேசுவோம். அந்த மேன்மையுடன் அவரது உண்மையான வரலாற்றை பேசுவதில்லை. இறந்தவருக்கான மேன்மையென்பது நாம் சொல்லும் முறையிலேயே இருக்க வேண்டுமே தவிர, மேன்மையென்ற பெயரில் ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் போக்கு, வரலாற்றுக்கு நாம் இழைக்கம் அநீதியாகும்.

அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நினைவுநாளில் நான்கைந்து பேர் உரையாற்றினார்கள். ஆனால் யாருமே அவரது முழுமையான வரலாற்றை பேசியிருக்கவில்லை. முழுமையான வரலாறென சொல்வது- அவரது அரசியல் வாழ்விலிருந்த பேசப்படாத காலத்தை.

எல்லோருடைய வாழ்விலும் சில பேசப்படாத காலங்கள் இருக்கும். ஆனால் அரசியல் வாழ்க்கையிலிருக்கும் ஒருவருக்கு, அந்த காலப்பகுதியில் பேசப்படாத காலம் இருக்க முடியாது. அப்படியொரு காலத்தை ஒளித்து வைத்துவிட்டு, பொதுவாழ்வில் இருப்பவர்கள் யாரும் ஓடி ஒளிந்து விட முடியாது.

வரலாறு மிகக்கடுமையான ஆசான் என்பார்கள். நாம் கற்க மறுத்தாலும், அது கற்பித்தே தீரும்.

அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இளமைக்கால அரசியல் ஈடுபாடு, அவர் எப்படி அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செயற்பாட்டாகி, அதன் முன்னணிக்கு வந்தார் என்பதை பற்றி நிறைய பதிவுகள் உள்ளன. அதை மீள நினைவூட்ட வேண்டியதில்லை.

அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு மட்டுமல்ல, அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கண்ணுக்கு தெரியாத மறுமலர்ச்சி சம்பவமொன்று உள்ளது. இந்த மறுமலர்ச்சி சம்பவம் பற்றி யாருமே பகிரங்கமாக இதுவரை பேசியதில்லை. இதை பேசாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் முன்னகர முடியாது.

2000 ஆம் ஆண்டு ஜனவரி 05ம் திகதி குமார் பொன்னம்பலம் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். குமாரின் மரணத்துடன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செயற்பாடு கிட்டத்தட்ட உறைநிலைக்கு சென்றுவிட்டது. அப்பொழுது கொழும்பில் சட்டத்தரணியாக செயற்பட்டு வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி கட்சி அரசியல் செயற்பாட்டில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், பின்னர் தமிழரசுக்கட்சியில் இருந்தார். ஆனால் இந்த இரண்டு கட்சிகளையும் விட அவர் ஆத்மார்த்தமாக இரண்டு ஆயுத அமைப்புக்களுடன் நெருக்கமாக செயற்பட்டிருந்தார். இதை யாரும் குறிப்பிடுவதில்லை.

முதலாவது விடுதலைப்புலிகள். விநாயகமூர்த்தி கொழும்பில் தங்கியிருந்தபோது, அவர் ஏதோ ஒரு விதத்தில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளிற்கு ஒத்தாசையாக இருந்தார். விடுதலைப்புலிகளின் சில நடவடிக்கைகளிற்கு வெளிப்படையான ஒத்தாசையாக இருந்தார். சிலவற்றை அவரும் புலிகளும் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல், ஆனால் தெரிந்தே செய்தார்கள். குறிப்பாக புலனாய்வுத்துறை செயற்பாடுகள். தமது புலனாய்வுச் செயற்பாடுகளிற்கு வசதியாக விநாயகமூர்த்தியின் வீட்டையும் புலிகள் பாவித்தார்கள். இதனால் அவர்களே விநாயகமூர்த்திக்கு ஒரு வீட்டை கொடுத்திருந்தார்கள். அவரது சில வாடகை வீடுகளிற்கான பணத்தை கொடுத்திருந்தார்கள். புலிகளிற்கும் அவருக்குமிருந்த பிணைப்பு ஆழமானது.

அதேபோல அவர் நெருக்கமாக இருந்த இன்னொரு ஆயுத அமைப்பு புளொட். அவர் உயிருடன் இருந்தவரை புளொட்டின் சட்டத்தரணியாக இருந்தார். புளொட்டின் புனர்வாழ்வு பிரிவாக இயங்கிய TRRF தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிதியத்தின் செயலாளராக விநாயகமூர்த்திதான் இருந்தார். தலைவராக தாராகி சிவராம் செயற்பட்டார்.

2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தேர்தலில் பங்குபற்றும் எண்ணத்துடன் இருக்கவில்லை. குமார் பொன்னம்பலத்தை சுட்டதால் அவர்கள் உறைநிலையில் இருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வழக்கம்போல எல்லா இடங்களிலும் போட்டியிட தயாரானது. யாழிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஆயுத இயக்கங்களாக இருந்து அரசியல் கட்சிகளாக மாறிய கட்சிகளிற்குமிடையில் அப்பொழுது நல்ல உறவிருக்கவில்லை. இரண்டு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டு வந்தனர். அப்பொழுது புளொட்டுடன் விநாயகமூர்த்தி நல்ல உறவில் இருந்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு ஒரு அழுத்தம் கொடுக்கலாமென்ற நோக்கத்துடன், யாழில் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை களமிறக்கியது புளொட்தான். இது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கும்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை விநாயகமூர்த்தியிடம் அப்போது இருக்கவில்லை. அவநம்பிக்கையுடன் இருந்தவரை புளொட்தான் யாழ்ப்பாணத்திற்கு “அள்ளி“ வந்தது. அப்படித்தான் குறிப்பிட வேண்டும். ஏனெனில், அப்பொழுது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் வருவதென்றால் உடனடியாக சாத்தியமில்லை. முற்பதிவு செய்துவிட்டு, இரண்டு மூன்று மாதமாவது காத்திருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதென்றால் உடனடியாக வர வேண்டும். விநாயகமூர்த்தியை புளொட் எப்படி யாழ்ப்பாணம் கொண்டு வந்தது தெரியுமா?

Image result for அப்பாத்துரை விநாயகமூர்த்திஅப்போது யாழ்- கொழும்பு விமான சேவையில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்களிற்கு குறிப்பிட்ட கோட்டா இருந்தது. ஒரு பயணத்தில் மூன்று ஆசனங்கள் இந்த அமைப்புக்களிற்கு. பணம் செலுத்த வேண்டும். ஆனால் ஒருவாரத்தின் முன்னரே பதிவுசெய்து, ஆசனத்தை பெறலாம். புளொட்டிற்கு இருந்த கோட்டாவை பயன்படுத்தி, புளொட் உறுப்பினர் என்ற பதிவிலேயே விநாயகமூர்த்தி யாழ்ப்பாணம் வந்தார். புளொட் உறுப்பினர் என வாயால் சொல்லி அழைத்து வர முடியாது. புளொட் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டே அவர் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டார்!

தேர்தலில் போட்டியிடும் எண்ணமேயில்லாமல் இருந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தியை கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக அழைத்து வந்து தேர்தலில் போட்டியிட வைத்து எம்.பியாக்கியது புளொட்!

அப்பாத்துரை விநாயகமூர்த்தி தேர்தலில் வெற்றிபெற்றதும், உத்தியோகபூர்வ வாகனமொன்றை பெற்றுக்கொண்டார். அதற்கு சாரதி தேவைப்பட்டபோது, புளொட் பிரமுகர் ஒருவரின் வாகன சாரதியாக இருந்த புளொட் உறுப்பினர் ஒருவரையே சாரதியாக்கினார். வன்னிக்கு சென்றுவரும்போது, அந்த சாரதியுடனேயே அப்பாத்துரை விநாயகமூர்த்தி சென்று வந்தார். அப்போதை பாராளுமன்ற உறுப்பினர்களில், தமது சொந்த வாகனத்தில், சொந்த சாரதியுடன் புதுக்குடியிருப்பு வரை சென்றுவர புலிகள் அனுமதித்திருந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர்- அப்பாத்துரை விநாயகமூர்த்திதான்!

தமிழ் காங்கிரசின் மறுமலர்ச்சியொன்று சத்தமின்றி நடந்ததாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். விநாயகமூர்த்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்ததுதான் அந்த மறுமலர்ச்சி. ஒருவகையில் பார்த்தால், அந்த மறுமலர்ச்சிக்கு புளொட்டும் வெளித்தெரியாத காரணமாக அமைந்திருக்கிறது.

குமார் பொன்னம்பலத்தின் மரணத்தின் பின் தமிழ் காங்கிரஸ் உறைநிலைக்கு சென்றிருந்தது. அதை உடைத்து, தமிழ் காங்கிரசை மீளவும் இயங்கு நிலைக்கு கொண்டு வந்தது அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் வெற்றி.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி பின்னர் தமிழ் காங்கிரசிலிருந்து ஒதுங்கி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக இருந்தார். அவரது பங்களிப்பை காங்கிரஸ் இப்பொழுது பகிரங்கமாக பேச விரும்புவதில்லை. அதேபோல, புளொட் அமைப்புடன் முதலமைச்சர் கூட்டணி வைத்தால் அதில் இணைய மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது.

இதைத்தான் வரலாற்றின் நகைமுரண் என்பது!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here