ஜப்பானில் கொரோனா கப்பலில் சிக்கிய கணவரை மீட்டுத்தர கோரி பெண் மனு!

கொரோனா வைரஸ் தொற்றால், ஜப்பான் நாட்டின் ஒக்காஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பலில் சிக்கித் தவிக்கும் தனது கணவரை மீட்டுத்தருமாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உதவி வேண்டி சென்ற அந்தப் பெண்ணுடன் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ., சரவணன் உறுதுணையாகச் சென்றார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது நாகமலை புதுக்கோட்டை. இங்குள்ள வடிவேல் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (41). அன்பழகனுக்குத் திருமணமாகி மனைவி மல்லிகா மற்றும் மகள் பிரியதர்ஷினி மகன் சுரேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

இவர் கடந்த 14 வருடங்களாக கப்பலில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒக்காஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கிறார். இவருடன் திருச்சி ஜெயராஜ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் இந்தியாவைச் சேர்ந்த மொத்தம் 166 பேரும் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தனது கணவர் அன்பழகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் டி.ஜி.வினயிடம் மனு கொடுத்தார் மல்லிகா. அவருடன் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் சென்றார்.

தனது கணவரை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உதவுமாறு மல்லிகா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here