கல் குவாரிக்கு எதிராக போராட்டிய விவசாயியை லாரி ஏற்றி கொன்றவர் கைது!

செய்யாறு அருகே கல் குவாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயியை லாரி ஏற்றி கொலை செய்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (65). விவசாயி. இவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றவர் மறுநாள் காலை நிலத்துக்கு அருகில் உள்ள பாதையில் உயிரிழந்து கிடந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் உயிரிழந்ததாகக் கூறி தூசி போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலராக பணியாற்றி வரும் கன்னியப்பனின் மகன் முரளி என்பவர் தனது தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்தப் பகுதியில் 4 கல் குவாரிகள் செயல்படுவதாகவும், அதற்கு எதிராக அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி நேரில் விசாரணை நடத்தினார். மேலும், தூசி காவல் ஆய்வாளர் ஷாகின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கல் குவாரிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், கடந்த 8-ம் தேதி இரவு 11 மணியளவில் குவாரியில் இருந்து வெளியே சென்ற லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட சிறுங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன் (29) என்பவரை சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் பிடித்து விசாரணை செய்தனர். அவர், கன்னியப்பனை லாரி ஏற்றி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கடந்த 8-ம் தேதி கல் குவாரியில் இருந்து புறப்பட்டபோது வழிமறித்த கன்னியப்பன், ஓட்டுநர் பாலமுருகனிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், இதில், ஆத்திரமடைந்த பாலமுருகன் லாரியை வேகமாக இயக்கி கன்னியப்பன் மீது ஏற்றி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸார் பாலமுருகனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here