அரசின் நெல் கொள்வனவு திட்டத்தில் அக்கறை காட்டாத அம்பாறை விவசாயிகள்!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் பெரும்போக நெல் கொள்வனவு காலதாமதமாகி உள்ளதால் விவசாயிகள் அரசின் நெல் கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் எதுவித ஆர்வமும் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு காலதாமதமாகி உள்ளதால் விவசாயிகள் அரசின் நெல் கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் மந்தகதி ஏற்பட்டுள்ளதுடன் அறுவடை முடிவடைந்து ஒரு வார காலத்திற்கு மேலான நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசு நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் சீரற்ற காலநிலை ,இடப்பற்றாக்குறை,களஞ்சிபடுத்தல் போன்ற காரணங்களால் அறுவடை காலங்களில் தனியார் நெல் கொள்வனவு செய்வோருக்கு பெரும்பாலான விவசாயிகள் நெல்லை விற்பனை செய்துள்ளனர்.அம்பாரை மாவட்டத்தில் இம்முறை பெரும்போக வேளாண்மைச் செய்கை அறுவடையில் ஒரு விவசாயியிடமிருந்து 5000 கிலோகிராம் வரை நெல் சந்தைபடுத்தும் சபை கொள்வனவு செய்யும். அது தவிர விவசாயிகளுடைய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தனியார் அரிசி ஆலைகளும் கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட அரசாங்கஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

கடந்த போகங்களில் 2000 கிலோ மாத்திரம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த போதும் இம்முறை அது 5000 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஒரு ஏக்கருக்கு குறைந்த செய்கையாளரிடமிருந்து 1000 கிலோவும் ஒன்றிலிருந்து மூன்று ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொண்டவர்களிடமிருந்து 3000 கிலோவும் மூன்று ஏக்கருக்கு மேல் நெல் செய்கை மேற்கொண்டவர்களிடமிருந்து ஆக்கூடியது 5000 கிலோவும் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இதேவேளை இம்முறை அம்பாரை மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையின் 56 களஞ்சியசாலைகளிலிருந்தும், பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் 15 பேர் மூலமாகவும் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உலர்த்தப்பட்ட நெல் ஒரு கிலோ ரூபா 50/- க்கும் தரத்தில் குறைந்த அதாவது 14 வீதத்திற்கும் 22 வீதத்திற்கும் உட்பட ஈரப்பதநுள்ள நெல் ரூபா 44/- க்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு மேலதிகமாக பிரதிநிதிகளாக பதிவு செய்த இரண்டு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் இருவர் தற்போது நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இம்முறை அம்பாறை மாவட்டத்திற்கு நெல் கொள்வனவு செய்ய அரசினால் 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இதுவரை பதிவு செய்யப்பட்ட தனியார் வியாபாரிகள் குறைந்த தரத்திலான 10,7000 கிலோ நெல் கொள்வனவு செய்துள்ளனர்.

இதனூடாக இம்முறை ஒரு இலட்சம் மெற்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தமது உற்பத்திகளை இம்முறை தனியார் வியாபாரிகளுக்கு அநியாய விலைக்கு விற்க வேண்டிய தேவை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here