இந்தோனேஷியாவில் குப்பை அள்ளும் ஸ்பைடர் மேன்!


இந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘ஸ்பைடர் மேன்’ உடையணிந்து கடல் மற்றும் நதிகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி வருகிறார்.

உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் 4வது இடத்தில் இருக்கும் இந்தோனேசியா உலகிலேயே அதிக அளவில் குப்பைகளை கொட்டும் நாடாகவும் திகழ்ந்து வருகிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.2 மில்லியன் தொன் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், அதில் பாதி அளவிலான குப்பைகள் கடலிலும், நதிகளிலும் கலப்பதாகவும் 2015ம் ஆண்டு வெளியான சர்வதேச ஆய்வறிக்கை கூறியது.

இந்த நிலையில் அந்த நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஸ்பைடர் மேன்’ உடையணிந்து கடல் மற்றும் நதிகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி வருகிறார். தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான பரேபரே நகரில் தேனீர் கடையில் வேலை செய்யும் ரூடி ஹார்ட்டோனோ என்ற அந்த இளைஞர் வேலை நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தை வீணாக்காமல், தான் வசிக்கும் பகுதியில் உள்ள நதிகளிலும் கடலிலும் கலக்கும் குப்பைகளை அகற்றி வருகிறார்.

அந்த இளைஞரின் சேவை அங்குள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ரூடி ஹார்ட்டோனோ அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ரூடி ஹார்ட்டோனோ கூறுகையில் “முதலில் நான் சாதாரண உடையிலேயே குப்பைகளை அகற்றி வந்தேன். அது அவ்வளவாக மக்களை ஈர்க்கவில்லை. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ‘ஸ்பைடர் மேன்’ உடையணிந்து குப்பைகள் அகற்றினேன். நான் எதிர்பார்த்ததை விட மக்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here