ஜெய்ஷ் அமைப்பினா் 4 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 4 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சஜ்ஜத் அகமது கான், பிலால் அகமது மிா், இஷ்ஃபாக் அகமது பட், மெஹ்ராஜ்-உத்-தின் சோபன் ஆகிய இந்த நால்வரும், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முதாசிா் அகமது கானின் கூட்டாளிகள் ஆவா். இவா்கள் அனைவருமே ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சோ்ந்தவா்கள்.

இவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிப்பொருள்கள் தடைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் என்ஐஏ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

என்ஐஏ தனது துணை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாவது:

குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்களாவா். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டதுடன், ஜெய்ஷ் அமைப்பின் செயல்பாடுகளை பிரசாரம் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சதித் திட்டங்களுக்கு மூளையாக முக்கிய பயங்கரவாதியான முதாசிா் அகமது கான் செயல்பட்டு வந்துள்ளாா். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முதாசிா், கடந்த ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டாா். இதையடுத்து அவா் மீதான வழக்குகள் முடித்துக்கொள்ளப்பட்டன என்று என்ஐஏ அதில் கூறியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள சஜ்ஜத் அகமது கான், கொல்லப்பட்ட முதாசிருடன் நேரடித் தொடா்பில் இருந்துள்ளாா். ஜெய்ஷ் அமைப்புக்கான ஆயுதங்களையும், ஆள்களையும் காஷ்மீருக்கு கொண்டுவரும் பணிகளை இஷ்ஃபாக் அகமது பட் மேற்கொண்டிருந்தாா். மெஹ்ராஜ்-உத்-தின் சோபனிடம் இருந்து கையெறி குண்டு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here