5 வீரர்களிற்கு தகுதியிழப்பு புள்ளிகள்!

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது களத்தில் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்ட இந்திய அணியைச் சேர்ந்த 2 வீரர்கள், பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் என 5பேருக்கு தகுதி இழப்பு புள்ளிகளை வழங்கி ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் நடை பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய இளையோர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி முதன் முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இந்த வெற்றியையடுத்து, இரு அணி வீரர்களும் களத்தில் கைகலப்பில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை நிலவியது. நடுவர் களும், அதிகாரிகளும் தலையிட்டு விலக்கிவிட்டதால் பெரிய அளவிலான மோதல்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக களநடுவர்கள் அளித்த புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விசாரணை நடத்தியது.

இதில் பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த தோஹித் ஹிர்தாய், ஷமிம் ஹொசைன், ராகிபுல் ஹசன் இந்திய அணியைச் சேர்ந்த ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் விளையாட்டை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து பங்களாதேஷ் அணி வீரர்களான தோஹித் ஹிர்தாய், ஷமிம் ஹொசைன் ஆகியோருக்கு தலா 6 தகுதி இழப்பு புள்ளிகளையும், ராகிபுல் ஹசனுக்கு 5 தகுதி இழப்பு புள்ளிகளையும் வழங்கி ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இந்திய வீரர்களான ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு தலா 5 தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரவி பிஷ்னோய், பங்களாதேஷ் வீரர் அவிஷேக் தாஸை ஆட்ட மிழக்கச் செய்த போது சைகைகள் காட்டி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் அவருக்கு கூடுதலாக 2 தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

6 தகுதி இழப்பு புள்ளிகள் என்பது எட்டு இடை நீக்கப் புள்ளிகளுக்கு சமம். ஒரு இடை நீக்கப் புள்ளிகளை பெற்றாலே ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல்லது சர்வதேச டி 20 ஆட்டம், 19 வயதுக்குட்பட்டோர் ஆட்டம் அல்லது ஏ அணியின் சர்வதேச ஆட்டம் ஆகியவற்றில் பங்கேற்கும் தகுதியை வீரர் இழப்பார். இந்த இடை நீக்கப் புள்ளிகளானது வீரர்கள் எதிர்வரும் காலங்களில் பங்கேற்க உள்ள போட்டிகளில் பயன்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here