கின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன்!

வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியியலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

க.கணேஸ்வரன் 28-02-2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து கொண்ட முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் இது பதிவாகியுள்ளது.

தனது சாதனை தொடர்பில் கனகேஸ்வரன் கணேஸ்வரன் தெரிவித்ததாவது- உலகத்தில் உள்ள பவர் ஸ்ட்ரிப்-களில் அதிக சொக்கட் அவுட்லெட்ஸ் உள்ள ஒரேயொரு பவர் ஸ்ட்ரிப் இதுதான். 42 சொக்கட்களிலும் 42 வகையான அப்லயன்ஸஸினை இணைக்கலாம். 13 அம்பியருக்கு மேற்படாதவாறு, சொக்கட்ஸூக்கு அப்லயன்ஸ் இணைக்கலாம். அதிலும் 3.2 கிலோ வாட் பெறுமானம் உள்ள அப்லயன்ஸ் வரைக்கும் இணைக்கலாம். 42 சொக்கட்ஸிலும் 42 ஃபோன்களை இணைக்கலாம்.

ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

29 வயதான கணேஸ்வரன், க.பொ.த உயர்தரம் வரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.

பின்னர், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் துறைக்குத் தெரிவான இவர், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்.

இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவினால் 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் 14 கண்டுபிடிப்புகளுடன் இவர் பங்குபற்றினார்.

அவற்றில் இரண்டிற்கு தங்கப்பதக்கங்களும் மற்றொன்றிற்கு இரண்டாம் இடமும் கிடைத்ததாக கணேஸ்வரன் குறிப்பிட்டார்.

‘என்னுடைய அப்பா விவசாயி. அம்மா ஆசிரியையாக இருந்தார். போர்ச்சூழல் காலகட்டத்தில் கொழும்பிற்கு செல்ல இயலாது. வேலை செய்யும்போது இருந்த வருமானம் இப்போது இல்லை. என்றாலும், திருப்தி அதிகமாக இருக்கிறது. காசை மட்டுமே நாங்கள் யோசித்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க இயலாது. 7 வகையான ரொக்கெட்களை ஏவி முயற்சி செய்திருக்கிறேன். அவற்றில் இரண்டு வெற்றியளித்திருக்கின்றன. தற்போது இலங்கையில் முதலாவது ‘லிகியூட் பியூல் ரெக்கெட் எஞ்சின்’ என்ற வர்க்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.’

புதுவித முயற்சிகள் வெற்றியடைந்து, அவற்றால் நாட்டிற்கு நன்மைகிடைக்க வேண்டுமென்பதே கணேஸ்வரனின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here