பழி தீர்த்த நியூஸிசிலாந்து.. 1989க்குப் பிறகு இந்தியா வைட்வோஷ்: கிராண்ட்ஹோம் முரட்டடியில் மூக்குடைந்தது!

மூன்றாவதும், கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று இந்திய அணிக்கு ஒரு அரிய ஒருநாள் வைட்வோஷ் தோல்வியை பரிசாக அளித்தது. 296 ரன்கள் இலக்கை விரட்டிய நியூஸிலாந்து 47.1 ஓவர்களில் 300/5 என்று அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 1989இல் மே.இ.தீவுகள் கொடுத்த 5-0 வைட்வோஷ் மற்றும் 2006இல் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில் மீதி 4 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா இந்திய அணியை வீழ்த்திய பிறகு தற்போது 2020இல் ஒருநாள் தொடரில் விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு 0-3 என்ற வைட்வோஷ் தோல்வியை நியூஸிலாந்து அணி அளித்துள்ளது.

இதன் மூலம் ரி20 தொடரில் இந்திய அணி 5-0 என்று அளித்த வைட்வோஷிற்கு நியூஸிலாந்து அணி தக்க பதிலடி கொடுத்து இந்தியப் பந்து வீச்சு, பீல்டிங்கின் தரமின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இல்லாதது பெரிய பின்னடைவு என்பதோடு பும்ராவின் பந்து வீச்சு எடுபடாமல் போனது பெரிய அச்சுறுத்தலாகும். டெனிஸ் லில்லி, கோர்னர் போன்றோரோடு ஒப்பிடப்பட்ட பும்ரா தற்போது கடைசி கால மனோஜ் பிரபாகர் போல் வீசுவது குறிப்பிடத்தக்கது.

ஷர்துல் தாக்கூரை ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவதை இந்திய அணி மறுபரிசீலனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று அவர் 9.1 ஓவர் 87 ரன்கள் 1 விக்கெட். இதில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விட்டுக் கொடுத்துள்ளார். மொத்தம் 55 பந்துகளை வீசிய அவர் 22 டொட்போல்களை கழித்துப் பார்த்தால் மீதி 33 பந்துகளில் 87 ரன்களை கொடுத்துள்ளார். இதில் 64 ரன்கள் பவுண்டரி, சிக்சர்களில் வந்தது.

நியூசிலாந்தின் கொலின் கிராண்ட் ஹோம் 21 பந்துகளில் முரட்டு அரைசதம் கண்டதில், இந்திய பந்துவீச்சு சின்னாபின்னமானது.

சாஹல், ஜடேஜா அருமையாக வீசி 20 ஓவர்களில் 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மற்ற வீச்சாளர்கள் சேர்ந்து 27 ஓவர்களில் சுமார் 208 ரன்களை விட்டுக் கொடுத்தது. சாஹல் 10 ஓவர் 1 மெய்டன் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஜடேஜா 45 ரன்களுக்கு 1 விக்கெட்.

நீஷம் விக்கெட்டை சாஹல் 40வது ஓவரில் வீழ்த்திய போது அந்த ஓவர் முடிவில் 223/5 என்று நியூஸிலாந்து இருந்தது, கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 74 ரன்கள் தேவை. ஆனால், சைனி, ஷர்துல் தாக்குர், பும்ரா ஆகியோர் சாத்துமுறை தான் வாங்கினர். சாஹல் தன் ஸ்பெல்லை முடிக்கும் போது 8 ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அப்போதுதான் 43வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். 2வது பந்தில் ஓஃப் ஸ்டம்புக்கு வெளியே இடம் கொடுக்க லதம் பவுண்டரிக்கு அனுப்பினார். பிறகு அதே ஓவரில் கொலின் டி கிராண்ட் ஹோம் இருந்த மூடுக்கு இந்தப் பிட்சில் வீசக்கூடாத ஸ்லோ பந்தை தாக்குர் வீச முரட்டடியில் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் பறந்தது. மீண்டும் ஸ்லோவாக ஷோட் ஆக வீச பந்து மிட்விக்கெட் பவுண்டரியை மோதியது. 15 ரன்களைக் கொடுத்தார் தாக்குர். சைனி பந்து வீச்சும் எடுபடவில்லை. அவர் தன் அடுத்த ஓவரில் 10 ரன்களை கொடுத்தார், பும்ரா 8 ரன்களை கொடுக்க 45வது ஓவரில் 273/5 என்று எளிதானது.

அதற்கு அடுத்த ஓவர் மீண்டும் தாக்கூரிடமே கோலி கொடுக்க, அவரோ படுமோசமாக வீச ஷோர்ட் பிட்ச், ஃபுல் போல் என்று நன்றாகப் போட்டுக் கொடுத்தார். கொலின் டிகிராண்ட் ஹோம் 3 பவுண்டரி ஒரு மிகப்பெரிய சிக்சருடன் 20 ரன்களை இந்தத் தாக்கூர் ஓவரை தாக்க 21 பந்துகளில் அரைசதம் கண்டார் கிராண்ட் ஹோம். கடைசியில் வின்னிங் ஷொட்டும் தாக்குர் பந்தில் பவுண்டரிதான். கிராண்ட் ஹோம் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 58 நொட் அவுட், ரொம் லதம் 32 நொட் அவுட். இருவரும் சேர்ந்து சுமார் 8 ஓவர்களில் 80 ரன்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மறக்க வேண்டிய போட்டியானது இது இந்தியாவுக்கு.

கப்தில், நிகோலஸ் அபாரத் தொடக்கம்:

297 ரன்களை இந்தப் பிட்சில் விரட்டுவது சற்றுக் கடினம்தான். ஆனால் இந்தியப் பந்து வீச்சில் பும்ரா உட்பட ஒன்றுமேயில்லாமல் செய்து, மார்டின் கப்தில் விளாசு விளாசென்று விளாசி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அதிரடி அரைசதம் கண்டார். ஒரு முனையில் நிகோல்ஸ் சிலபல அருமையான ஷொட்களுடன் 72 பந்துகளில் 5 பவுண்டரிகளுட அரைசதம் எடுக்க இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 87 பந்துகளில் 100 ரன்களைச் சேர்த்து 106 ரன்களில் பிரிந்தனர்.

சாஹல் வீசிய மிக அருமையான பிளைட்டட் கிளாசிக் லெக் ஸ்பின்னர் கனவுப்பந்தில் ஓஃப் ஸ்டம்பைத் தாக்க கப்தில் போல்ட் ஆனார். மிகப்பிரமாதமான பந்து அது. வில்லியம்சன் (22) நிகோல்ஸ் இணைந்து 53 ரன்களை மேலும் சேர்க்க சாஹலின் மோசமான, எங்கு வேண்டுமானாலும் விளாசக்கூடிய ஷோர்ட் பிட்ச் பந்தை நேராக மிட்விக்கெட்டில் அகர்வால் கையில் கட்ச் கொடுத்து வெளியேறினார். ரோஸ் ரெய்லர் 12 ரன்களில் ஜடேஜா பந்து ஒன்று நின்று வர ஷோர்ட் கவரில் கட்ச் கொடுத்து முதல் முறையாக இந்தத் தொடரில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு நிகோல்ஸ் 103 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்த நிலையில் தாக்கூர் வீசிய ஒரே நல்ல பந்தில் ராகுலிடம் கட்ச் ஆகி வெளியேற ஸ்கோர் 32.5 ஓவர்களில் 189/4, அதன் பிறகு ஜேம்ஸ் நீஷம் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 19 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தை நேராக மிட்விக்கெட்டில் கோலியிடம் கட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்கோர் 39.3 ஓவர்களில் 220/5. அதன் பிறகுதான் கொலின் டி கிராண்ட் ஹோம் படையல் ஆரம்பித்தது, வெளுத்து வாங்கினார், 21 பந்துகளில் முரட்டு அரைசதம் எடுக்க லதம் அவருக்கு உறுதுணை இன்னிங்ஸை ஆட அங்கிருந்து 8 ஓவர்களில் இந்தியாவின் கதையை முடித்தார்.

ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், பாண்டே அபார ஆட்டம்:

ரொஸ் வென்று முதலில் இந்திய அணியை ஆட அனுப்பினார் வில்லியம்சன். மயங்க் அகர்வால், கைல் ஜேமிசனின் பியூட்டி பந்துக்கு ஸ்டம்புகளை இழந்து 1 ரன்னில் வெளியேறினார்.

பிரிதிவி ஷா 42 பந்துகளில் 40 ரன்களுக்கு மிகப்பிரமாதமாக ஆடினார். சில பிரமிப்பூட்டும் ஷொட்களை அவர் ஆடினார். குறிப்பாக ஹாமிஷ் பென்னட் வீசிய ஒரு ஓவரில் ஒரு சச்சின் பாணி ஹூக் ஷொட்டில் டீப் ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்சரையும் பிறகு அதே ஓவரில் ஒரு பேக்ஃபுட் பஞ்ச் பவுண்டரியையும் பிறகு அதே ஒவரில் ஒரு ஷோர்ட் பிட்ச் எகிறு பந்தை டீப் பொயிண்டுக்கு சிக்சரையும் தூக்கி அச்சுறுத்தினார்.

ஆனால் 42 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அவர் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு பந்தை பிளிக் ஷாட் ஆடி லெக் திசைக்கு அடித்தார், 2வது ரன்னை ஓடும்போது சற்றுதான் மந்தம் காட்டினார், அங்கிருந்து கொலின் டி கிராண்ட் ஹோம் த்ரோ சரியாக லேதமுக்கு வர பிரிதிவி ஷா ரன் அவுட் ஆனார்.

முன்னதாக கப்டன் விராட் கோலிக்கு மறக்கக் கூடிய ஒரு தொடராக இது அமையும் வண்ணம் 9 ரன்களில் கிரீசுக்கு வெளியே நின்று ஷோர்ட் பிட்ச் பந்து ஒன்றை இன்னும் பின்னால் வந்து விளாசாமல் அங்கிருந்தே அப்பர் கட் செய்ய முயன்று நேராக தேர்ட்மேனில் ஜேமிசனிடம் கட்ச் ஆகி வெளியேறினார், அதோடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட பந்துகளில் பீட்டன் ஆனார். அவரை நியூஸி. ஒர்க் அவுட் செய்து விட்டனர் என்றே கூற வேண்டும்.

62/3 என்ற நிலையில் ராகுல் 113 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார். வந்தவுடனேயே மார்க் வாஹ் பாணியில் பின்னால் சென்று ஒரு பந்தை கட் ஆடிய விதத்திலிருந்து அவர் இருக்கும் போர்மை புரிந்து கொள்ள முடிந்தது, ஷ்ரேயஸ் அய்யர் 63 பந்துகளில் 62 ரன்களில் 9 பவுண்டரிகளை அடித்தார். இருவரும் சேர்ந்து 100 ரன்களைச் சேர்க்க அய்யர் நீஷமிடம் வெளியேறினார், அதன் பிறகு மணீஷ் பாண்டே இறங்கி அர்த்தபூர்வமாக ஆடினார் 48 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார் என்பதோடு ராகுலும் இவரும் சேர்ந்து இன்னொரு சதக்கூட்டணியில் 107 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி 296/7 என்று முடிந்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஹாமிஷ் பென்னட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா வைட்வோஷ் வாங்கியது.

ஆட்ட நாயகனாக ஹென்றி நிகோல்ஸும், தொடர் நாயகனாக ரோஸ் ரெய்லரும் தேர்வு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here