யாழில் மாற்றுப் பாலினத்தவருக்கு ஆட்சேர்க்கப்படுகிறார்களா?: அதிர வைக்கும் தகவல்கள்!


யாழில் அதிகரித்து வரும் தற்கொலைகளின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக உளவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ள விவகாரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மாற்றுப் பாலினத்தினர் (Transgender) விவகாரம் தமிழ் சமூகத்தில் “விவகாரமான“ விடயமாக அணுகப்பட்டு வரும் நிலையில், புதிதாக வெளியாகியுள்ள இந்த தகவல் மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மாற்றுப்பாலினத்தவரின் உணர்வுகளும், உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதில் இரண்டாவது கருத்தில்லை. தமிழ் சமூகத்தில் அவர்களிற்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை, அவர்கள் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான்.

அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவும், மாற்றுப் பாலினத்தவர்கள் என பகிரங்கமாக அடையாளப்படுத்தி சமூகத்தில் தமக்குரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், யாழில் அண்மையில் மாற்றுப் பாலினத்தவர்கள் என அமையாளப்படுத்துபவர்கள் மீது உளவள ஆலோசகர்கள் பல குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார்கள்.

மாற்றுப்பாலினத்தவர்களுடன் தொடர்புடைய உளவியலாளர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சிகிச்சை மையத்தினருடன் தமிழ்பக்கம் இது குறித்து பேசியது. இதன்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

யாழில் இடம்பெறும் தற்கொலைகளிற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக மாற்றுப் பாலினத்தவர் விவகாரம் உள்ளதாக அவர்கள் தெரிவித்து, அதற்கான புள்ளி விபரங்களை அடுக்குகிறார்கள்.

சில மாதங்களின் முன்னர் யாழில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவன் தற்கொலை செய்திருந்தார். மாற்றுப்பாலின விவகாரமே அவரது தற்கொலைக்கு காரணமென பின்னர் கண்டறியப்பட்டது. எனினும், அது குறித்து யாரும் பகிரங்கமாக பேசவில்லை.

“ஆணாக பிறந்தவர் பெண்ணாகவும், பெண்ணாக பிறந்தவர் ஆணாகவும் உணர்வதுதான் மாற்றுப்பாலினத்தவரின் அடிப்படை. அதை அங்கீகரிக்க வேண்டும். யாழில் மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத நிலையில், அவர்கள் மோசமான வாழ்க்கை வாழும் நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையை மையமாக வைத்து அவர்களிற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்களிற்கான பாலியல் விழிப்புணர்வு மற்றும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால், இன்று இந்த விவகாரம் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக உணர்கிறோம்“ என்றார் யாழ் போதனா வைத்தியசாலையின் உளவளத்துணையாளர் ஒருவர்.

மாற்றுப் பாலினத்தவர்கள் ஆரம்பத்தில் யாழில் சில தனிநபர்களின் வீடுகளை மையப்படுத்தி வாழ்ந்து வந்தனர். மாற்றுப் பாலினத்தவர் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, இப்படியான வீடுகளில் வாழ்ந்தனர்.

மாற்றுப்பாலினத்தவர்கள் எல்லோருமே ஒரே விதமான வாழ்க்கையை அமைக்கவில்லை. சிலர் தமது வாழ்க்கையை தாமே அமைத்துக் கொண்டனர். அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும், சுயதொழிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்னொரு குழுவினர், பொழுதுபோக்காக வாழத் தொடங்கினார்கள். இவர்கள் ஒரு குழுவாக இயங்க தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சேர்க்க தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக திசைமாற தொடங்கினார்கள். சில வருடங்களின் முன்னர், மாற்றுப்பாலினத்தவர்கள் யாழ்ப்பாண கோட்டை பகுதியில் மாலைப் பொழுதுகளில் கூடுவதும், பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்பவர்கள் அவர்களை நாடுவதும் சாதாரண நிகழ்வாக இருந்தது.

யாழில் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் கணிசமான தொகையினர், மாற்றுப் பாலினத்தவர் என்ற அதிர்ச்சி புள்ளிவிபரமும் உள்ளது.

கோட்டையை மையப்படுத்தி பாலியல் செயற்பாடுகள் தீவிரம் பெற, அவர்களிற்காக இயங்கிய தன்னார்வ அமைப்பொன்று அக்கறை காண்பித்து அவர்களை அதிலிருந்து மீட்டு, தொழில் நிறுவனங்களில் இணைக்க முயன்றது. எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லையென்றும், கொழும்பில் தொழில் நிறுவனங்களில் இணைக்கப்பட்டவர்கள் யாழிற்கு திரும்பி வந்து விட்டதாகவும், அந்த தன்னார்வ அமைப்பின் பிரதிநிதியொருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

“மதப் பிரச்சாரகர்கள் போல, அமைப்புக்களிற்கு ஆட்சேர்ப்பவர்களை போல இவர்கள் செயற்படுகிறார்கள். பதின்ம பருவத்தில் பலருக்கு தடுமாற்றம் வரும். ஏதாவது விசேட தூண்டுதல்கள் இல்லாவிட்டால் அவர்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவார்கள். அல்லது ஆரம்பத்திலேயே அதை பெற்றோர் அறிந்து சரியான உளவளச் சிகிச்சைக்குட்படுத்த வேண்டும். எனினும், யாழிலுள்ள மாற்றுப் பாலினக் குழுக்கள் அதிகமானவர்களை தமது குழுவில் உள்ளீர்க்கிறது. பாடசாலை மாணவர்களும், பாடசாலை கல்வியை முடிக்கும் வயதிலுள்ளவர்களும் அதிகமானவர்கள் இந்த குழுக்களின் பிடியில் சிக்குகிறார்கள். ஆரம்பத்திலேயே இந்த தொடர்புகளை கண்டறிய தவறினால், அவர்கள் அந்த குழுக்களின் பிடியில் தீவிரமாக சிக்கி, வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு பொழுதுபோக்காக, முன்னர் இயக்கங்களிற்கு போவதை போல இப்பொழுது பல இளையவர்கள் இந்த குழுக்களுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஒவ்வொருவரும் தமக்குரிய வலையமைப்பின் மூலம் புதிது புதிதாக ஆட்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பான விழிப்புணர்வு திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். சமூகத்தின் இந்த பிரச்சனையை யாரும் இதுவரை கவனிப்பதாக தெரியவில்லை.

ஐந்து, ஆறு வருடங்களின் முன்னர் யாழில் 25 அல்லது 30 பேர்தான் மாற்றுப் பாலினத்தவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அது 800 வரையாக அதிகரித்துள்ளது. இந்த திடீர் அதிகரிப்பு எப்படி வந்தது? இது இயல்பானதல்ல. இது ஒரு பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுகிறது. இப்போது யாழில் மாற்றுப் பாலினத்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் பலர் உண்மையில் மாற்றுப்பாலினத்தவர்கள் அல்ல. அவர்கள் அந்த திசைக்குள் இழுக்கப்பட்டுள்ளவர்கள்“ என யாழிலுள்ள முக்கிய உளவளத்துணையாளர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

ஆண்களாக மாறிய பெண்கள், பெண்களாக மாறிய பெண்கள் என இரு தரப்பின் தொடர்பின் மூலம், இரு தரப்பினரும் இந்த வலையமைப்பிற்குள் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள்.

அண்மையில் யாழிலுள்ள முக்கிய பெண்கள் கல்லூரி மாணவியொருவர் தொடர்புடைய விவகாரத்தையும் அந்த உளவளத் துணையாளர் தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

“யாழிலுள்ள முக்கிய பெண்கள் கல்லூரியின் மாணவியொருவர் விளையாட்டுக்களிலும் பிரகாசித்தவர். அவருக்கு எப்படியோ, மாற்றுப் பாலினத்தவர்கள் சிலருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் சில மாதங்களில் தன்னை ஆணாக உணர்வதாக வீட்டில் தெரிவித்தார். திடீர் திடீரென வீட்டைவிட்டு வெளியேறி அந்தக்குழுக்களுடன் சென்றார். வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு இப்பொழுது அவர் வீட்டை விட்டு வெளியேறி அந்தக் குழுக்களுடன் இணைந்து விட்டார். ஆரம்பத்திலேயே பெற்றோர் இதை அவதானித்து, உளவளத்துணையாளர்களிடம் அழைத்து வந்திருந்தால், இந்த விவகாரத்தை சரி செய்திருக்கலாம். ஆனால், அவர் வீட்டைவிட்டு வெளியேறும் நிலையிலேயே அழைத்து வந்தனர். எனினும், அது எல்லைமீறிய காலகட்டம். தமது பிள்ளைகள் காதலில் விழுகிறார்களா என கண்காணித்துக் கொள்வதுதான் இதுவரை பல பெற்றோரின் பிரச்சனையாக இருந்தது. ஆனால், இப்பொழுது இந்த விடயத்திலும் அவதானமாக இருக்க வேண்டும்.

உண்மையிலேயே ஒருவர் பாலின மாற்றத்தை உணர்ந்தால், அதை எந்த உளவளச்சிகிச்சையாலும் மாற்ற முடியாது. ஆனால், ட்ரென்டிங்காக அதில் ஈர்க்கப்படுவதை, பெற்றோர் அவதானமாக இருந்தால் தடுக்கலாம்“ என்றும் அவர் தெரிவித்தார்.

யாழில் மாற்றுப் பாலினத்தவர்கள் அதிகரித்ததையடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அவர்களிற்கான சிகிச்சை மையத்தில் இரத்த பரிசோதனை திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொடர்புகளால் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தவிர்க்க, சுகாதார அமைச்சின் ஆலோசனையுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆணாகவும், பெண்ணாகவும் மாறிய மாற்றுப் பாலினத்தவரே அந்த மையத்தில் கடமையிலுள்ளனர். தமது வலையமைப்பின் ஊடாக, மாற்றுப் பாலினத்தவர்களை இரத்த பரிசோதனைக்காக அவர்கள் அழைத்து வருகிறார்கள். அனேகமாக ஓரினச் சேர்க்கையாளர்களே இந்த இரத்த பரிசோதனைக்காக வந்து செல்கிறார்கள். தற்போது வரை யாழில் இரத்தப் பரிசோதனை செய்த ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை- 2,000 இற்கும் அதிகம்!

இதில் அதிர்ச்சியான விடயம் என்னவெனில், தமது வலையமைப்பில் இருப்பவர்கள் என தெரிவித்து பாடசாலை மாணவர்களையும் அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இலங்கையிலுள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் கிரைண்டர் என்ற மொபைல் அப் ஒன்றை பாவித்து, தமக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஓரினச்சேர்க்கை வலையமைப்பில் தொடர்பை ஏற்படுத்தும் ஒருவர், இந்த அப்பில் இணைந்து கொண்டதும், சற்றிங் மூலம் அருகிலுள்ளவரோ, பிடித்தமானவரோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.

மாற்று பாலினத்தவர்களிற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது ஒப்பீட்டளவில் மாற்றுப் பாலினத்தவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். வீடுகளில் எதிர்ப்பென்றால் தயக்கமின்றி வெளியேறுகிறார்கள். அடைக்கலம் கொடுக்க அவர்களிற்கு வலையமைப்பொன்று உள்ளது. ஆனால், இந்த வலையமைப்பு முறையாக நெறிப்படுத்தப்படாததாலேயே, ஆட்சேர்ப்பு செய்வதை போல பலர் அந்த வலையமைப்பிற்குள் உள்ளீர்க்கப்படுகிறார்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

ஒருவரின் உளமாற்றத்தை சட்டத்தாலோ, நிர்வாக நடைமுறைகளாலோ தடை செய்ய முடியாது. எனினும், அதை வழிப்படுத்துவது சமூகத்தின் பொறுப்பல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here