ஃபார்வர்டு செய்யும்போது கவனம்: வதந்தி, போலிச் செய்திகளை தடுக்க புதிய நடவடிக்கை: வாட்ஸ் அப் நிறுவனம் தீவிரம்

வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருகிறோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத்தன்மையில்லாத செய்திகள், மெசேஜ்கள், படங்கள் சமீபகாலமாக பரப்பிவிடப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் நடந்ததுபோல் சித்தரித்து பரப்பிவிடப்படுகின்றன.

இதனால், மக்கள் இதை நம்பி பல்வேறு இடங்களில் வன்முறைகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என நினைத்து 5 பேரை மக்கள் அடித்துக்கொன்றனர். திரிபுராவிலும் இதே போன்று சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்து, வாட்ஸ் அப் நிறுவனத்துக்க மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில் போலியான செய்திகளையும், படங்களையும், பொறுப்பற்றதனமாகப் பரப்புகிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள், இந்த போலித்தனமான செய்திகளால், பல்வேறுவிதமான தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன, அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் எச்சரிக்கையை ஏற்று வாட்ஸ் அப் நிறுவனம் இன்று விளக்கம் தெரிவித்துள்ளது. அதில் தாங்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், போலிச்செய்திகளையும், படங்களையும் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மத்திய அரசின் கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. வாட்ஸ் அப் செய்திகளைப் பரப்பி இதுபோன்ற வன்முறைச் செயல்கள் நடப்பதை நினைத்து அச்சப்படுகிறோம். அரசு எழுப்பிய விஷயங்களுக்கும், கவலைகளுக்கும் விரைவாகத் தீர்வு காண நினைக்கிறோம். இந்தச் சவாலுக்கான தீர்வைத் தேடுவதற்கு, அரசு, சமூகம், மக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்படுவீர்கள் என நம்புகிறோம்.

தேவையில்லாத செய்திகளை, தகவல்களைத் தடுக்கும் வகையில் குரூப் சாட்டில் பல்வேறுவிதமான மாற்றங்களைச் சமீபத்தில் செய்திருக்கிறோம். இந்த மாற்றங்கள், மத்திய அரசு எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்.

புதிய நடவடிக்கைகள்

ஒரு குரூப்பில் உள்ள அட்மின்கள், தனிப்பட்ட குழுக்குளுக்குள் யார் மெசேஜ்களைப் பெற வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். ஒரு குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறிவிட்டால், மீண்டும் அவரை மற்றவர்கள் சேர்த்துக்கொள்வதைத் தடுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் தேவையில்லா செய்திகளை பரப்புபவர்களைத் தடுக்க முடியும்,

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் சோதித்து வருகிறோம். அதாவது ஒரு செய்தி எங்கு உருவாக்கப்பட்டது, எத்தனை நபர்களிடம் இருந்து ஃபார்வர்டாகி வந்துள்ளது என்பதைக் கண்டறியும் வசதியாகும்.

விரைவில் அறிமுகம்இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் எந்த நபரும் எந்த ஒரு செய்தியையும் பரப்புவதற்கு முன், நன்கு திட்டமிட்டு, சிந்தித்துச் செயல்படுவார். ஏனென்றால்,தான் அனுப்பும் செய்தியால் ஏதேனும் விபரீதங்கள், கலவரங்கள் நடந்தால், தான் சிக்கக்கூடும் என்பதால், அதை ஃபார்வர்டு செய்ய மாட்டார்கள். இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது. இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும், மக்களுக்கு ஆன்லைன் வசதியை எந்த வகையில் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஊட்ட இருக்கிறோம். இதற்காக பயிற்சிப் பட்டறைகள் உருவாக்கப்படும், அறிவிப்புகள் போன்றவை வெளியிடப்படும்.

வதந்திகள், போலிச்செய்திகள் பரப்புவதைத் தடுக்கும் வகையில், முதல் முறையாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறோம். உதாரணமாக, மெக்சிகோ நாட்டில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், வெரிபிகாடோ என்ற செய்திக்குழுமத்துடன் இணைந்து பணியாற்றியது. அதில் 10 ஆயிரம் போலியான செய்திகள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் பூம்லைவ் என்ற அமைப்புடன் இணைந்து உண்மைத்தன்மையை அறியும் முயற்சிகளைச் செய்து வருகிறோம். இந்த வசதி மூலம் ஒவ்வொருவரும் வாட்ஸ் அப் குறித்தும், போலிச்செய்திகள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் நன்கு புரிந்து கொள்ள முடியும்.”

இவ்வாறு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here