டெல்லி அரசின் ஆலோசனையுடன் தான் துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

‘மற்ற மாநிலங்களைப் போல டெல்லிக்கு முழு அதிகாரம் இல்லையென்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையுடன் தான் துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும். குறிப்பிட்ட சில துறைகளை தவிர மற்றவற்றிக்கு துணை நிலை ஆளுநரின் ஆலோசனை இன்றி டெல்லி அரசு செயல்பட முடியும் என ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வந்தார். இதனால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

‘அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்’ என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது,

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில் ‘‘அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும். மத்திய – மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

காவல்துறை, நிலம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தவிர மற்ற துறைகளில் முழுமையாக முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் பொறுப்பு உண்டு.

நீதிமன்ற முந்தைய தீர்ப்புகளின்படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது. எனினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையுடன் தான் செயல்பட முடியும்’’ என நீதிபதிகள் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here