ரொனால்ட்டோ சாதனை… அணி தோல்வி!

இத்தாலியக் காற்பந்து லீக்கில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் கோல் போட்ட முதல் யுவென்டஸ் வீரர் என்ற சாதனையை நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புரிந்துள்ளார்.

இத்தாலிய லீக்கில் நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் யுவென்டஸ், ஹெல்லஸ் வெரோனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் யுவென்டஸ் அணிக்காக ரொனால்டோ கோல் போட்டு முன்னிலை பெற்றுத் தந்தார். இதன்மூலம் மேற்கூறப்பட்ட சாதனையை இவர் படைத்தார்.

எனினும், ரொனால்டோ கோல் போட்டும் இந்த ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் யுவென்டஸ் தோல்வியுற்றது இவரது சாதனையை மங்கச் செய்தது.

ஸ்பானிய ஜாம்பவானான ரியால் மட்ரிட் அணியின் முன்னாள் வீரரான ரொனால்டோ, நடப்பு இத்தாலிய லீக்கில் யுவென்டசுக்காக 20 கோல்களை அடித்துள்ளார்.

2005ஆம் ஆண்டில் யுவென்டஸ் குழுவிற்காக விளையாடிய பிரெஞ்சு தாக்குதல் வீரர் டேவிட் ட்ரெசகெ, இத்தாலிய லீக்கில் தொடர்ச்சியாக ஒன்பது ஆட்டங்களில் கோல் போட்டிருந்தார். இப்போது அவரது சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

கடந்த வாரம்தான் தமது 35வது பிறந்தநாளை ரொனால்டோ கொண்டாடினார். வயது ஏறிக்கொண்டிருந்தாலும் இவரது வேகமும் கோல்போடும் திறனும் குறைந்தபாடில்லை.

ரொனால்டோ சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றாலும் இவரது வயது ஏறிக்கொண்டிருப்பதால் இவரை வாங்க ஜெர்மானிய ஜாம்பவன் அணியான பயர்ன் மியூனிக் தயக்கம் காட்டுவதாக காற்பந்து வட்டாரங்கள் கூறுகின்றன.

35 வயதிலும் தம்மால் இவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் எனத் தாம் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று ரொனால்டோவே ஒப்புக்கொண்டுள்ளார்.

இத்தாலிய லீக் பட்டியலில் யுவென்டஸ் குழு தற்போது முன்னிலை வகிக்கிறது. எனினும், லீக் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள வெரோனா, யுவென்டசுக்கு தோல்வியைத் தந்திருப்பது யுவென்டஸ் நிர்வாகி மௌரிசியோ சாரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய லீக் பருவம் பாதி கட்டத்தைக் கடந்துள்ள வேளையில், யுவென்டஸ் அணியை துரத்திக்கொண்டிருக்கும் இண்டர் மிலான் அணி, யுவென்டசைவிட மூன்று புள்ளிகள் மட்டுமே குறைவாகப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here