சனிப் பெயர்ச்சி பலன்கள் – 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)


2020-ம் ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ஆகிய முதல் நான்கு ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். எடுத்த காரியங்களைத் தடையின்றி செய்து முடித்து விடுவீர்கள். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியையும் ஏற்றங்களையும் காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

இதுவரை, சுணங்கி வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். இதனால் புதிய உறவுகள் உருவாகும். நல்லவர்களின் சகவாசமும் உண்டாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.

இழந்த பதவி, பொன், பொருள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். பொருளாதார வளமும் உயரத் தொடங்கும். பழைய காலத்தில் மூடி வைத்திருந்த தொழில்களை திரும்ப நடத்தத் தொடங்குவீர்கள். தொழில் மேம்பட பயணங்கள் மேற்கொள்வீர்கள். சமூக, பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் கௌரவம், அந்தஸ்து இரண்டும் உயரும் காலகட்டமாக இது அமைகிறது.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து ஆதரவு கூடும். வீட்டிலும் வெளியிலும் அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். உங்களுக்கு எதிராக நடந்த சதிவேலைகள் அனைத்தும் பொடிப்பொடியாகி விடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். செய்தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கும் மேல் இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்கள் வேலைகளைத் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடித்து விடுவீர்கள்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்வதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். நீண்ட கால லட்சியங்கள், கனவுகள் நிறைவேற அடித்தளங்களை அமைத்துக் கொள்வீர்கள். கடினமாக உழைத்தாலும் சரியான நேரத்தில் ஆகாரம் ஓய்வு ஆகியவைகளை எடுத்துக் கொள்வீர்கள். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்துக்கு மேலும் நன்மைகளைச் செய்ய முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அறிமுகமில்லாதோரின் ஆதரவும் நன்மைகளைத் தேடித்தரும். செய்தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். சமயோசித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். அதேநேரம் போட்டியாளர்களிடமிருந்து விலகி இருக்கவும். குழந்தைகள் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களிடம் பிரச்னைகளைத் தவிர்த்து கவனமாக நடந்து கொள்வீர்கள். சிறப்பான ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு பழைய சேமிப்புகள் கை கொடுக்கும். போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். புதிய விவசாயிகள் உபகரணங்களை வாங்குவீர்கள். கால்நடைகளால் நல்ல பலனைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். எண்ணங்களைச் செயலாக்குவதில் தடைகள் ஏற்படாது. சிறப்பான அங்கீகாரம் பெற்று அதிர்ஷ்டசாலிகளாக வலம் வருவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உருவாகும். பாராட்டும் பணமும் வந்து சேரும். கோபப்படாமல் காரியங்களைச் செய்வது நல்லது. பெண்மணிகள் மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். திருமணமாகவேண்டியவர்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் திகழ்வீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

பரிகாரம்: “ஜய ஜய துர்க்கா’ என்று ஜபித்து துர்க்கையை வழிபட்டு வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப்போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் சொல்வாக்கு செல்வாக்காக மாறும். உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். இதனால் குடும்பத்தில் சகஜ நிலை தொடரும்.

செய்தொழிலை கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடத்துவீர்கள். வருமானத்தைப் பெருக்க புதிய முயற்சிகளைச் செய்வீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய துறைகளில் ஈடுபடுவீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் மறையும். பெற்றோரின் ஆரோக்கியமும் சீர்படும். புத்தியைக் கூர்மையாக்கி திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கையும் உண்டாகும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். சிலர் நவீன இல்லத்திற்கு மாறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். புதிய பொறுப்புகளும் ஒப்பந்தங்களும் உங்களைத் தேடி வரும். தொலைந்து போயிருந்த பொருள்கள் மறுபடியும் திரும்பக் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சற்று பாராமுகமாக இருப்பதால் அதற்கேற்றவாறு செயல்முறைகளை மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் மேன்மையடையும். புதிய முதலீடுகளையும் செய்வீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீர்கள். குடும்பத்திற்குச் சற்று கூடுதலாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் சிறு பிரச்னைகள் தோன்றினாலும் உங்கள் அனுபவ அறிவால் அவற்றை சரிசெய்து விடுவீர்கள். குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வரும் காலகட்டமிது.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தாக்கள் கிடைக்கும். சுறுசுறுப்பாக உழைத்து காரியமாற்றுவீர்கள். உடலாரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். சிலருக்கு வசதியான வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இடமாற்றங்கள் சாதகமாகவே இருக்கும். சம்பள உயர்வுகள் கிடைத்து சந்தோஷமடைவீர்கள். அலுவலகத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும் நல்லெண்ணங்களுக்கும் ஆளாவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி கிடைக்கும்.

வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத்தொழிலில் சில முடிவுகளைத் தனித்தே எடுக்கவும். விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய குத்தகை தேடாமலேயே கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவீர்கள். விவசாய விளைபொருள்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலைகளைச் சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் அரவணைப்பும் இருப்பதால் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாக முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகள் வெளியுலகுக்கு வெளிப்படும்.

பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் சிறு சிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களுடன் வம்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். படிப்பில் முழு அக்கறை காட்டினால் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் அளவான யோக பாக்கியங்கள் உண்டாகும். செய்தொழிலை கவனத்துடன் நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். அனுபவஸ்தர்கள், முதியவர்கள் இவர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்பட்டு சுலபமாக வெற்றி பெறுவீர்கள்.

புதிய முயற்சிகள் புதிய உயரங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும். எதிர்காலத்திற்குச் சீரிய வழியில் முதலீடு செய்வீர்கள். தயக்கங்கள், குழப்பங்களைத் தவிர்த்து செயல்களில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து விடுவீர்கள். பங்காளிகளிடமும் நல்லுறவு வைத்துக் கொள்வீர்கள்.

முக்கிய முடிவு எடுக்கும் நேரத்தில் பொறுமையாக யோசித்து எடுப்பீர்கள். அசையும் அசையாச் சொத்துகளின் சேர்க்கையும் திடீரென்று சிலருக்கு உண்டாகும். சிலர் வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பார்கள். குறைந்த உழைப்பில் கூடுதல் வருமானம் பெறக்கூடிய காலகட்டமாக இது அமைகிறது.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். செய்தொழிலை கவனமாகவும் எச்சரிக்கையுடனும் நடத்துவீர்கள். போட்டியாளர்களிடமும் எதிர்ப்பாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். குழந்தைகளை உயர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். குடும்பத்தாருடன் சிறிது மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் வீண் பேச்சு வேண்டாம்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய திட்டங்களை வகுப்பீர்கள். எதிர்பார்த்த குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பங்கு வர்த்தகத்தின் மூலமும் பரஸ்பர நிதிகள் மூலமும் உபரி வருவாய் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து உங்களை திக்குமுக்காடச் செய்து விடும்.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கை கூடும். செயல்திறமை கூடும். உங்கள் செயல்களில் தனி முத்திரையை பதிப்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். அவர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும். குடும்பத்திலும் குதூகலம் நிறைந்து காணப்படும். இல்லத்தில் சுப காரியங்கள் இனிதாக நிறைவேறும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அதேநேரம் முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களை கண்டு கொள்ள வேண்டாம். எவரையும் பகைத்துக் கொள்ளவும் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகள் உதவியாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவில் இருக்கும். உழைப்பு வீண் போகாது.

வியாபாரிகள் கவனம் சிதறாமல் வியாபாரத்தைக் கவனிக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகள் தேடி வரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்ல பெயர் வாங்குவீர்கள். பணவரவு சரளமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கும். உயர்ந்தவர்களைச் சந்தித்து வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். புதிய நண்பர்களால் பெருமையடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது துறையில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகள் ஆடம்பரப் பொருள்களை வாங்குவர். பணவரவு சீராக இருக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைக்கும். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சனிபகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப் போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் பேச்சுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு அதிகரிக்கும். பேச்சிலும் இனிமை கூடும். நாவன்ûமால் அனைவரையும் கவருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தோல்வி ஏற்பட்டாலும் மறுபடியும் முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள்.

முக்கிய பயணங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். நெடுநாளாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடலுபாதைகளிலிருந்து மீண்டு வந்து புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உறவினர்கள், புதிய நண்பர்களுடன் இருந்த மனத்தாங்கல்கள் நீங்கி விடும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். புதிய நண்பர்களுடன் சேர்ந்து ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். பழைய மனத்தாங்கல்களை மறக்க முயல்வீர்கள். நெடுநாளாக விற்காத நிலம், வீடு நல்ல விலைக்கு விற்று அதனால் தொடர் வருமானம் வரக்கூடிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் தனித்திறமை வெளிப்பட்டு பரிமளிக்கும். கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். பணிபுரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உங்கள் நல்லெண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரால் பாராட்டப்படுவீர்கள்.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடி குறைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உதவி செய்வார்கள். வேலைகளில் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். பிரச்னைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். குறிக்கோளை நோக்கி செயல்படுவீர்கள். முக்கிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து வாக்கு கொடுக்கவும். ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு உண்டாகும். குடும்பத்துடன் புனித ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும் காலகட்டமிது.

14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களும் சீர்பட்டு சாதகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மை அடையும். அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் காலகட்டமாகும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாம். கடினமாக உழைத்தால் உழைப்பு இரட்டிப்பு பலன் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு அலுவலக வேலைகளில் சாதகமான திடீர் திருப்பம் ஏற்படும். பணவரவிற்குத் தடை ஏதுமில்லை. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அலுவலக பயணங்கள் செய்யலாம். வியாபாரிகள் போட்டி பொறாமைகளைக் குறைத்து சுமுக நிலையை காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் சிறு சிரமங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. அனைத்து விவசாயப் பணிகளும் தடையுடனே வெற்றி பெறும். காய்கறி, பால் வியாபாரம் லாபம் தரும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகள் குறையும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் காரியங்களைச் செய்வீர்கள். கட்சி மேலிடத்தின் உத்திரவிற்குப் பிறகே மக்களின் முக்கிய பிரச்னைகளில் கருத்து தெரிவிக்கவும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்திற்கு குறைவில்லை. சிலருக்கு விருதுகளும் கிடைக்கும். சக கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறுதடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here