டுபாயிலிருந்து வந்த இரகசிய தகவல்… இலங்கையில் போதைப்பொருளுடன் யுவதிகள் சிக்கியது எப்படி?

கடந்த இரண்டு ஆண்டுகளில், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய வேட்டையில் 1,000 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாக்கந்துர மதுஷின் கைதின் பின் சில மாதங்களாக அமைதியாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். எனினும், அவர்களின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ம் திகதி 192 கிலோகிராம் ஹெரோயின் சிக்கிய விவகாரம், கடத்தல்காரர்களிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. அவர்கள் நினைப்பதை போல, இலகுவாக கடத்தலில் ஈடுபட முடியாதென்ற விடயத்தை உணர்த்தியிருக்கும்.

மேல் மாகாண டி.ஐ.ஜி.உருண ஜெயசுந்தரவின் நேரடி வழிகாட்டுதலின் பேரில் பண்டாரகமவில் உள்ள களனிகம பகுதியில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.

பெலியகோட எஸ்.எஸ்.பி அலுவலகத்தில் வியாழக்கிழமை போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, டி.ஐ.ஜி வருண ஜெயசுந்தரவுக்கு டுபாய் உளவாளியிடமிருந்து தகவல் கிடைத்தது. நாட்டிற்குள் பெருமளவு போதைப்பொருள் கொண்டுவரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி, பல புலனாய்வு அதிகாரிகளை களமிறக்கி போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்க மைக்ரோ-நெட் பயன்படுத்தப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருட்களை ஈரானிய கப்பல் மூலம் இந்தியப் பெருங்கடலுக்கு கொண்டு வந்து பின்னர் பல நாள் கப்பலில் மிரிச கடற்கரைக்கு கொண்டு செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

எஸ்.டி.எஃப் புலனாய்வு பிரிவின் தலைமை ஆய்வாளர் மஞ்சுல சில்வா, மிரிச அருகே உள்ள அஹங்கம பொலிஸ் நிலையத்தின் ஓ.ஐ.சியாக பணியாற்றி வருகிறார். அவர் மேற்கொண்ட விசாரணையில், மிரிசவிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களை பின்னர் களனிகமவுக்கு பிரதான வீதி வழியாக ஒரு வாகனத்தில் கொண்டு சென்றதையும் விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தினர்.

வியாழக்கிழமை காலை களனிகம நெடுஞ்சாலை அருகே சாலையில் சிவப்பு ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை, பெலியகோட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர். அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் கொள்கலனில் 15 கிலோகிராம் ஹெராயின் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்தப் பெண் ஹெராயினை எடுத்து வந்த வீடு குறித்து விசாரித்தபோது, ​​பொலிஸ் அதிகாரிகளை ஒரு வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு எந்த தடயமும் சிக்கவில்லை. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பொலிசாரை திசைதிருப்ப தமது வீட்டிற்கு அழைத்து சென்றார், பிறிதொரு வீட்டில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

அவரை தொடர்ந்து உருட்டியெடுத்த பொலிசார், விடயத்தை கக்க வைத்தனர்.  களனிகமவின் நியூ சிட்டி எஸ்டேட்டில் ஒரு வீட்டில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை அவர் வெளிப்படுத்தினார். வீட்டை பரிசோதித்ததில் பெருந்தொகை ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. அங்கு 177 கிலோகிராம் ஹெரோயின் இருந்தது.

மேலும், 10 மைக்ரோ துப்பாக்கிகள் மற்றும் 19 மகசீன்களும் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 5 புதிய துப்பாக்கிகள். அவற்றின் மகசீன்களில் 10 அல்லது 12  தோட்டாக்களை செருகும் திறன் கொண்டவை என்று பொலிசார் தெரிவித்தனர். அமெரிக்கா, சீனா, ஒஸ்திரியா மற்றும் பாகிஸ்தானில் இந்த ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் காஞ்சனா பிரியதர்ஷனி (28), அவரது சகோதரர் தனஞ்சய தர்மகுமார (26) மற்றும் அவரது காதலி உபேக்ஷா பியூமி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டையும் சந்தேகநபர்கள் வாடகைக்கு பெற்றிருந்தனர். இதற்காக ஆறுமாத முற்பணத்தையும் செலுத்தியிருந்தனர்.

ஆடை தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் என, வீட்டு உரிமையாளருக்கு தம்மை அறிமுகப்படுத்தியுள்ளனர். அயலிலுள்ளவர்களிற்கு எந்தவித சந்தேகமும் இல்லாமல் தங்கள் தொழிலை மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் அந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருட்களை எடுத்துச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் கைது செய்யப்பட்ட பிரியதர்ஷனி என்பவர், துசித மதுரங்க அல்லது மாத்தறை மல்லியின் மனைவி ஆவார். 2018 நவம்பரில் மகரகமவில் அவரை பொலிசார் கைது செய்தனர்.

இந்த கடத்தலின் பின்னணியில்  மக்கந்துரே மதுஷின் பெயரும் உள்ளது. மதுஷின் முக்கிய உதவியாளர்களில் ஒருவரான, தலைமறைவாக இருந்த கெலும் இந்திக அல்லது பித்திகல கெவுமா இதில் தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெலியகொட பிரிவின் குற்றப்பிரிவு கைது செய்யப்பட்ட கெவுமா ஒரு கோடீஸ்வரராக அறிமுகமாகி, தனது பணத்தை சமூக சேவைக்காக செலவிட்டார். மாத்தறை மல்லி உள்ளிட்டவர்களை பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் கொள்ளைக்கு கெவுமாவே அழைத்துச் சென்றிருந்தார்.

டி.ஐ.ஜி வருண ஜெயசுந்தர, எஸ்.டி.எஃப் இன் உளவுத்துறை இயக்குநராக இருந்த ஒரு திறமையான அதிகாரி. முந்தைய ஆட்சியின் போது, ​​அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பொது பொலிஸ் சேவைக்கு நியமிக்கப்பட்டார். அவர் உளவுத்துறை இயக்குநராக இருந்தபோது, ​​மதுஷ் வாழ்ந்த டுபாய்க்கு ஒரு உளவாளியும் அனுப்பப்பட்டார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி மதுஷ் கைது செய்யப்பட்டபோது, ​​மதுஷை சிக்க வைக்க டுபாய் சென்ற உளவாளியும் ஹோட்டலில் இருந்தார். மதுஷ் கைது செய்யப்பட்ட செய்தி முதலில் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு அவர் மூலமே தெரியவந்தது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பணந்துறை நீதிவானின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏழு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அதன்படி, கடத்தலின் பின்னால் உள்ளவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று விசாரணை செய்யும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here