ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கில் போலி கணக்கு உருவாக்க பணிப்பு: உருவாகிறது சுமந்திரனின் சமூக ஊடக பிரச்சார பிரிவு!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிய்ச்சல் பிடுங்கல்கள் அதிகரித்து வருகிறது. மற்ற அனைத்து எம்.பிக்களையும் விட, பிரச்சாரத்தில் அதிக தீவிரம் காட்டும் சுமந்திரன், அனைத்து எம்.பிக்களின் தொகுதிகளிற்கும் நுழைந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இது கூட்டமைப்பு வட்டாரங்களிற்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றுக்கொள்வதில் சுமந்திரன் தீவிரமாக உள்ளார். அவர் அதிகூடிய வாக்கை பெற்றுக்கொள்வார் என அவரது சகாக்கள் தீவிர நம்பிக்கையூட்டி வருகிறார்கள். அவரை சூழவுள்ள நான்கைந்து பேர், அவர் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக வாக்கை பெறுவார் என நம்பிக்கையூட்டி வருகிறார்கள். இதன்மூலம், விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியை எட்டிப்பிடிக்கலாமென்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

இதன் ஒரு அங்கமாக, சமூக ஊடகங்களில் “சுமந்திரன் ஆர்மி“யை உருவாக்கும் முயற்சி தீவிரமாக இடம்பெறுகிறது. இந்த முயற்சியின் முதற்படியாக, இன்று யாழில் சுமந்திரன் ஆர்மியாக செயற்படவுள்ளவர்களிற்கான முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது.

சமூக வலைத்தளங்களில் கண்ணைமூடிக் கொண்டு சுமந்திரனை ஆதரிக்கும் சுமார் இருபது பேர் வரையானவர்கள் இன்று, யாழிலுள்ள சுமந்திரனின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கலந்துரையாடல் நடத்தப்பட்டது. எம்.ஏ.சுமந்திரன், ச.சுகிர்தன், கே.சயந்தன் ஆகியோர் இந்த கலந்துரையாடலை நடத்தினர்.

இதன்போது, சமூக ஊடகங்களில் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென “பேஸ்புக் போராளிகளிற்கு“ விளக்கமளிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் பல போலி பேஸ்புக் கணக்குகள் உருவாக்க வேண்டும், பேஸ்புக் ஆதரவாளர்களை உருவாக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரன் தொடர்பாக விமர்சனங்கள் ஏதும் வைக்கப்பட்டால், அந்த பதிவின் கீழ் போலிக்கணக்குகள் மூலம் நூற்றுக்கணக்கான பதிவுகளை இட வேண்டுமென அவர்களிற்கு உத்தரவிடப்பட்டது. இதன்மூலம், தமக்கு சாதகமான அப்பிராயத்தை மக்கள் மத்தியில் உருவாக்கலாமென குறிப்பிடப்பட்டது.

சுமார் இருபது வரையானவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பேஸ்புக் பிரச்சாரத்தில் ஈடுபடும் சிலர் அடையாளம் காணப்பட்டு, சன்மானம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எனினும், இந்த விடயம் இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. இன்ப அதிர்ச்சியாக சன்மானம் வழங்கப்படுமென தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here