ராகுல் அதிவேக அரை சதம்: டெல்லியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

11-வது சீசன் ஐபிஎல் போட்டியில் மொஹாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பஞ்சாப் அணியின் தொடக்க வீர்ரர கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி அதிவேகமான அரை சதம் அடித்தது அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழக வீரர் அஸ்வினின் தலைமைக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகவும் அமைந்தது.

மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது.

ரொஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் அணியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17வயதான முஜிபுர் ரஹ்மான் களமிறக்கப்பட்டார்.

ஐபிஎல் போட்டியில் மிகக்குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் எனும் பெருமையை ரஹ்மான் (17 வயது111 நாட்கள்) பெற்றார். இதற்கு முன் சர்பிராஸ் கான் (17 வயது177 நாட்கள்) அந்த பெருமையை வைத்திருந்தார்.

முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

முன்ரோ, கம்பீர் ஆட்டத்தை தொடங்கினார்கள். அஸ்வின், முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சுக்கு இருவரும் ரன் சேர்க்க திணறினார்கள். ரஹ்மான் பந்துவீச்சில் முன்ரோ(6 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், கம்பீருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். கம்பீர் தனது வழக்கமான அதிரடிக்கு மாறி பவுண்டரிகளாக விளாசியதால், ரன்ரேட் திடீரென வேகமெடுத்தது.

ஒரு சிக்சர் மட்டுமே அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்கள் சேர்த்திருந்த படேல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் சங்கரும் சோபிக்கவில்லை 13 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார்.

36-வது அரைசதம்

இதனால் 10 ஓவர்களுக்கு 77 ரன்கள் 3 விக்கெட் என்ற நிலையில் டெல்லி அணி இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு வந்த ரிஸ்பா பந்த், கம்பீருடன் இணைந்து அதிரடியாக சில பவுண்டரிகளையும், ஒரு சிக்சரும் அடித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய கம்பீர் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஐபிஎல் லீக் போட்டியில் அவருக்கு இது 36-வது அரை சதமாக அமைந்தது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்பா நீண்டநேரம் நிலைக்கவில்லை 28 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹ்மான் பந்துவீச்சில் ரிஸ்பா ஆட்டமிழந்தார்.

14-வது ஓவரில் அவசரப்பட்டு ஒரு ரன் ஓடிய கம்பீர் டிரக்ட் ஹிட் மூலம் ரஹ்மான் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். கம்பீர் 55 ரன்கள்(5 பவுண்டரி,ஒருசிக்சர்) சேர்த்து வெளியேறினார்.

அடுத்து வந்த டிவேடியா 9 ரன்களிலும், கிறிஸ்டியன் 13 ரன்களிலும் விரைவாக வெளியேறினார். கிறிஸ்மோரிஸ் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கிங்ஸ்லெவன் அணித் தரப்பில் ரஹ்மான், சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

167 இலக்கு

167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் அணிக்கு கேஎல் ராகுல், அகர்வால் நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதிலும் கே.எல் ராகுல் முதல் ஓவரில் இருந்தே பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒருசிக்சர் உள்ளிட் 16 ரன்கள் சேர்த்தார்.

முகமது ஷமி வீசிய 2-வது ஓவரிலும் ஒருசிக்சர், ஒருபவுண்டரி என 10ரன்களை ராகுல் சேர்த்தார். இதனால், கிங்ஸ் லெவன் அணி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

14 பந்துகளில் அரைசதம்

மிஸ்ரா வீசிய 3-வது ஓவரில் ஒருபவுண்டரியைத் தொடர்ந்து 2 சிக்சர்கள், அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் என 24 ரன்கள் சேர்த்து 14 பந்துகளில் ராகுல் அரை சதத்தை நிறைவு செய்தார். ஐபிஎல் போட்டியில் மிகவிரைவாக அரைசதம் அடித்த பெருமையை ராகுல் பெற்றார்.

மோரிஸ் வீசிய 4-வது ஓவரில் அகர்வால் (7) ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளை மட்டும் சந்தித்த ராகுல் 51 ரன்களில்(16 பந்துகள், 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

யுவராஜ் ஏமாற்றம்

யுவராஜ்சிங், கருண் நாயர் ஜோடி நிதானமாக பேட் செய்தது. யுவராஜ் சிங் அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தபோதிலும் பொறுமையாகவே ஆடினார்.

முகமது ஷமி வீசிய 9-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த கருண் நாயர் ரன் ரேட்டை உயர்த்தினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 12 ரன்களில் டிவேடியா பந்துவீச்சில் வெளியேறினார்.

கருண் நாயரும், டேவிட் மில்லரும் நிதானமா ஆடி ரன்களைச் சேர்த்தனர். அவ்வப்போது சில அதிரடி ஷொட்களை அடித்து கருண்நாயர் ரன்களை குவித்தார். கருண் நாயர் 33 பந்துகளில் அரைசதம் அடித்து கிறிஸ்டியன் பந்துவீச்சில் வெளியேனார். இவர் கணக்கில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடக்கம்.

அடுத்து வந்த ஸ்டோய்னிஸ், மில்லருடன் இணைந்தார். கடைசி 2 ஓவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஓவரை போல்ட் வீசி 18-வது ஓவரில் 10 ரன்கள் சேர்த்து மில்லரும், ஸ்டோய்னிஸும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

18.5 ஓவர்கள் ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் அணி வென்றது. மில்லர் 24 ரன்களுடனும், ஸ்டோய்னிஸ் 22 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் போல்ட், மோரிஸ், கிறிஸ்டியன், டிவேசியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here