வடக்கை மிரட்டிய திருடிகள் சிக்கினர்!

சித்தரிப்பு படம்

வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண்கள் மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியிலுள்ள சதோச விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் 12மணியளவில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்ற பெண்கள் தாம் அணிந்திருந்த ஆடைக்குள் இன்னுமொரு ஆடை அணிந்து அவ் ஆடைக்குள் பொருட்களை திருடி சென்றுள்ளனர். சந்தேகமடைந்த சதோச பணியாளர் சீ.சீ.ரி.வி வீடியோவை பார்வையிட்ட போது திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சீ.சீ.ரீ.வி வீடியோவின் உதவியுடன் மூன்று பெண்களை கைது செய்துள்ளதாகவும் கொழும்பு, பாணந்துறையை சேர்ந்த 22,45,62 வயதுடையவர்களென்றும் திருடப்பட்டவை 35000 ரூபா பெறுமதியான பொருட்களெனவும் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் முன்னர் திருடியுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் நடவடிக்கையினை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடுவின் ஆலோசனையில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகரான உபதிஸ்ஸ, உபபொலிஸ் பரிசோதகர் பி.திஷாநாயக்க, ஆகியோரின் வழிநடத்தலில் பொலிஸ் சாஜன்களான சுமணசேகர (33088), விக்கிரமசிங்க (36099), பொலிஸ் கொஸ்தாபல்களான உபாலி (60945), நிஷாந்த (19900), விஷ்ணு (54395), பெண் பொலிஸ் கொஸ்தாபலான சாமந்தி (8824) ஆகியோர் இந் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here