சீனாவில் கொரோனா கொடுமைக்குள் சிக்கிய தமிழக மாணவன், மாணவி!

கொரோனா வைரஸ் பரவி வரும் சீனாவில் தமிழக மாணவர், மாணவி சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா அண்டனூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்-கண்மணி தம்பதியின் 2வது மகன் மணிசங்கர் (23). சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த மணிசங்கருக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வில் போதிய கட்-ஆப் மதிப்பெண்கள் கிடைக்காததாலும், அவரது பெற்றோர்களிடம் போதிய பண வசதி இல்லாததாலும் தமிழகத்தில் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சீனாவில் மருத்துவக்கல்வி படிக்கலாம் என முடிவெடுத்த மணிசங்கர், நண்பர்கள் உதவியோடு சீனாவில் உகான் நகரில் உள்ள உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவராக கடந்த 2014ம் ஆண்டு சேர்ந்தார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக அங்கு மணிசங்கர் மருத்துவம் பயின்று வரும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மணிசங்கருடன் படிக்கும் மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். ஆனால் மணிசங்கர் ஊருக்கு வராமல் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார். அவருடன் தமிழகத்தை சேர்ந்த மேலும் 5 மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு மணிசங்கர் நாடு திரும்புவதற்காக சீனாவின் உகான் விமான நிலையத்திற்கு சென்றார். ஆனால் சீனாவில் இருந்து யாரும் வெளியேறவும், வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வரவும் அந்த நாட்டு அரசு தடை விதித்து இருப்பதால் மீண்டும் மணிசங்கர் பல்கலைக்கழக விடுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் மணிசங்கர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அண்டனூர் கிராமத்தில் வசிக்கும் அவரது பெற்றோர் தங்களது மகனின் நிலை கண்டு பெரும் துயரத்தில் உள்ளனர்.

கோவையை சேர்ந்த ஒரு மாணவியும் சீனாவில் சிக்கி தவித்து வருகிறார். கொரோனோ வைரஸ் பீதியினால், வீட்டில் முடங்கியுள்ள கோவை மதுக்கரையை சேர்ந்த மருத்துவ மாணவி மினாலினி என்பவர் கோவையில் உள்ள தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் சீனாவில் தவித்து வருவதாகவும், முக கவசம் வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை என்றும் அழுதபடி கூறியதாக தகவல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here