பழிவாங்கலிற்கு இடமளிக்காமல் ஓய்வுபெறுகிறேன்: அதிரடியாக அறிவித்தார் மட்டு அரச அதிபர்!


அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் மட்டக்களப்பு முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார். அரசியல் பழிவாங்கலிற்கு உட்படாமல் தனது பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.

இன்று (25) மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பட்டதாரி ஆசிரியராக மகிழவட்டவானில் கடமையினை தொடங்கிய நான் இந்த மாவட்ட அரசாங்க அதிபர் வரை படிப்படியாக முன்னேறி வந்துள்ளேன். தற்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒய்வு பெறவுள்ளேன்.

23.11.2017 இல் இருந்து இன்று வரை ஒரு குறுகிய காலத்தில் இந்த மாவட்டத்தினை நிருவகிக்க கிடைத்தது. இதில் உதவி புரிந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

சமூக வலைத்தளங்களிலும், முகநூலிலும் அரச அதிபர் நியமனம் தொடர்பாக கூறப்படுகின்றது கவலையளிக்கின்றது. இதனால் மக்கள் பல குழப்பங்கக்ளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

அரச அதிபர் என்பவர் மாவட்ட நிருவாகத்தை கவனிப்பதற்காக அரச உள்நாட்டு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் நியமிக்கப் படுபவர். இலங்கை நிருவாக சேவையில் அதியுயர் தரத்தைச் சேர்ந்த நேர்மை, திறமை படைத்தவர்கள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகின்றார்கள்.

நேற்றைய தினம் அமைச்சரவையால் புதிதாக ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறியமுடிகிறது. எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் எனது சார்பாக நான் அன்புடன் வரவேற்கின்றேன்.

எவ்வாறாயினும் இலங்ககை நிருவாக சேவையில் இருந்து ஒய்வு பெறுவதற்கு வெறுமனே 10 மாதங்களும் 18 நாட்களுமே உள்ள நிலையில் எதுவித குற்றங்களும் இழைக்காமல், எதுவித விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல், கடந்த 21 வருடங்களுக்கு மேலாக இச் சேவையில் உள்ள என்னை எதுவித விசாரணையோ, முன்னறிவித்தலோ இன்றி இடமாற்றம் வழங்கப்படவுள்ளமையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே எனது கட்டாய ஒய்வு தினமான 21.12.2020 முன்னதாக சுய விருப்பிற்கான ஓய்விற்காக அமைச்சரவைக்கு விண்ணப்பித்துள்ளேன் என்பதை அறியத்தருகின்றேன் என மேலும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஓய்வுபெறும் மட்டு அரச அதிபர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here