நுவரெலியாவில் இராதா… பதுளையில் அரவிந்த்: தேர்தலிற்கு தயார்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.

அட்டன் மலையக மக்கள் முன்னணி தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார், செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம், மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளர் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா, சிரேஷ்ட உப தலைவர்களான ஜெபாரதி, கிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள், மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணியில் எதிர்வரும் தேர்தலில் யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற பொறுப்பு மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவிற்கும், மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக குழுவினருக்குமே இருக்கின்றது.

அந்த அடிப்படையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 98 வீதமானவர்கள் கலந்து கொண்டு இதற்கு ஏகமனதாக ஒத்துழைப்பு வழங்கினர்.

ஒரு சிலர் வெளியில் இருந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகுவதாக தெரிவிக்கின்ற கருத்துக்கள் எல்லாம் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு அல்ல. எமக்கு என்று ஒரு கட்டுப்பாடு ஒரு நிர்வாகம், ஒரு தலைமைத்துவம் இருக்கின்றது.

அதற்கு அமைய ஜனநாயக ரீதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த இருவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக போட்டியிடவுள்ளனர்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

கட்சியின் ஏகமனதான தீர்மானத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கமைய எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் நான் போட்டியிடுகின்றேன்.இந்த தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

மலையக மக்கள் முன்னணியை பொருத்தவரையில் இது ஜனநாயகத்தை பின்பற்றி வளர்ந்து வந்திருக்கின்ற ஒரு அமைப்பாகும். எனவே இன்று எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் படி நாங்கள் செயற்படவுள்ளோம்.

-க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here