கனடாவில் கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக யுவதி ஆபத்தான நிலையில்!

குன்னூரைச் சேர்ந்த மாணவி, கனடா நாட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த மாணவி ரேச்சல் ஆல்பர்ட். இவர் கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். வடக்கு யோர்க் பகுதியில் நேற்று (24) காலை 8 மணியளவில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் வெட்டிச் சென்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ரேச்சலின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரேச்சல் ஆபத்தான நிலையில் உள்ளார். இப்போதைக்கு அவர் முக்கியமான பராமரிப்புப் பிரிவில் இருக்கிறார். இருப்பினும் அவரது நிலைமை மோசமாக உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து அறிய எங்களுக்கு சில மணிநேரம் பிடித்தது. சம்பவம் நடந்தது குறித்து எங்களுக்கு 3 மணிநேரம் கழிந்த பின்னர் தான் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்தோம். விசாவுக்கான ஆன்லைன் படிவங்களை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். எங்களுக்கு அவசர அடிப்படையில் விசா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

மேலும், வெளியுறவு துறை அமைச்சருடன் பேசியதை உறுதிப்படுத்திய பெற்றோர், “அவர் எங்களுக்கு உதவி செய்வதாக என்னிடம் கூறினார். எங்கள் விண்ணப்ப எண் தேவை, அப்போதுதான் எங்களுக்கு விசாக்களை வழங்க முடியும் என்றார். இப்போது, விண்ணப்ப எண்ணைப் பெறுவதில் சிக்கல் உள்ளது” என்றனர்.

இதனிடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

“ரேச்சல் ஆல்பர்ட் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர்களது குடும்ப விசாவுக்கு உதவுமாறு நான் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக எங்களை +91 9873983884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”.

இவ்வாறு ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

சம்பவ தினமான இரவு 10 மணிக்கு பின்னர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ரேச்சலினை தாக்கி, கழுத்தில் குத்தி, வீதியில் அந்த நபர் இழுத்து சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here