வடக்கு ஆளுனரின் உள்ளூராட்சிசபைகளின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி!

வடமாகாண உள்ளூராட்சிசபைகளிற்கான ஆளுனரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற கேணல் தர அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கடமைகளை பொறுப்பேற்ற அவர், இன்று முதலாவது சந்திப்பாக யாழ் மாநகரசபையுடன் சந்திப்பை மேற்கொள்கிறார்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சிங்களவர் ஒருவர் யாழ் மாநகரசபை இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் சிறு திருத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த இராணுவ அதிகாரி, வடக்கு ஆளுனரின் வடமாகாண உள்ளூராட்சிசபைகளின் இணைப்பாளராக செயற்படவுள்ளார்.

வடக்கிற்கு இராணுவ ஆளுனர்களை முன்னைய அரசு நியமித்திருந்தது. அது சர்ச்சையானதை தொடர்ந்து, தற்போது சிவில் ஆளுனர் ஒருவரை நியமித்து, அவரின் கீழ் உள்ள விவகாரங்களிற்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கப் போகிறதா என்ற பலமான சந்தேகத்தை இது எழுப்பியுள்ளது.

தற்போதைய நிலையில், வரி அதிகரிப்பு போன்ற மிகச்சில விவகாரங்களிற்கு மாத்திரமே ஆளுனரின் அனுமதியை மாநகரசபை பெற வேண்டும். எனினும், இணைப்பாளர் நியமனத்தின் மூலம் உள்ளூராட்சிசபைகளையும், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுனர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவுள்ளாரா என்ற பலமான சந்தேகம் வடக்கு உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதிகார பரவலாக்கல் தத்துவத்திற்கு இது முரணாக அமையுமா என்பதை, இணைப்பாளருடனான சந்திப்பிற்கு சென்று வந்த பின்னரே கூற முடியுமென யாழ் மாநகரசபை வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.

இன்று காலை 9.30 மணிக்கு, யாழ் மாநரசபை முதல்வர், ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர், ஆளுனரின் இணைப்பாளரான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை சந்திக்கிறார்கள்.

இதேவேளை, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை இணைப்பாளராக்கிய விவகாரம் உண்மையா என, யாழ் மாநகரசபை ஆணையாளரை தமிழ்பக்கம் நேற்று தொடர்பு கொண்டு கேட்டது. அப்படியொரு விடயத்தை தான் அறியவில்லை, சந்திப்பிற்கான அழைப்பு வரவில்லை, தான் கொழும்பில் நிற்பதாக தெரிவித்தார். எனினும், இன்று ஆணையாளரும் சந்திப்பிற்கு செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here