முதல் ரி20: இந்தியா வெற்றி!


கப்டன் கோலி, ராகுல் வலுவான அடித்தளம், ஸ்ரேயாஸ் அய்யரின் அதிரடி பினிஷிங் ஆகியவற்றால் ஒக்லாந்தில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் இந்தியஅணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 பந்துகள் மீதிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டில் வென்றது.

அதிரடி ஆட்டம் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் 19வது ஓவரை சவுதி வீச முதல் பந்தை சிக்சருக்குத் தூக்கி பிறகு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி, கடைசி பந்தை மீண்டும் சிக்சருக்குத் தூக்கியது வின்னிங் ஷொட்டாக அமைந்தது.

இந்திய அணி சார்பில் கப்டன் கோலி (45), ராகுல்(56) ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 58 ரன்களிலும் , மணிஷ் பாண்டே14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் அடித்த நிலையில் 7 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் மட்டையின் நுனியில் பந்துபட்டு டெய்லிரிடம் கட்சாக மாறியது.

அடுத்து கப்டன் கோலி களம்புகுந்து ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் சேரந்தபின் இந்திய அணியின் ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குறையாமல் வைத்திருந்தனர். ஓவருக்கு ஒரு பவுண்டரி, சிக்ஸர் என இருவரில் ஒருவர் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

பவர்ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்தது. கோலி ஒருபுறம் நிதானமாக ஆட, மறுபுறம் ராகுல் , நியூஸிலாந்து வீரர்களின் பந்துவீச்சை இடம் பார்த்து சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் தள்ளினார். !

டிக்னர் வீசிய 9வது ஓவரில் சிக்ஸர் அடித்து ராகுல் 24பந்துகளில் அரைசதம் அடித்தார். ஈஷ் சோதி வீசி 10வது ஓவரில் லோங்ஓப் திசையில் சவுதியிடம் கட்ச் கொடுத்து ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி கோலியுடன் சேர்ந்தார். நீண்டநேரம் நிலைக்காத கோலி 45 ரன்னில் டிக்னர் பந்துவீச்சில் கப்தில் கட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார். உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியை ரன் அவுட் செய்து திருப்புமுனையை ஏற்படுத்திய கப்தில் இந்த போட்டியில் கோலிக்கு பிடித்த கட்சும் திருப்புமுனையானதுதான் என்பதில் மாற்றமில்லை. ஆனால், இந்த வாய்ப்பை அடுத்து நியூஸிலாந்து வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டனர். கோலி 32 பந்துகளில் 45 ரன்களுடன்( ஒருசிக்ஸர், 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். ராகுலுக்கு ஒரு எளிதான ரன் அவுட் வாய்ப்பையும் கோலிக்கு கட்சையும் விட்டனர் நியூஸிலாந்து அணியினர்.

அடுத்து வந்த ஷிவம் துபே வந்த வேகத்தில் சான்ட்னர் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். ஈஷ் ஷோதி வீசிய 13வது ஓவரில் துபே 13 ரன்னில் சவுதியிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 13வது ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் என்ற வலிமையான நிலையில் இருந்தது.

அடுத்துவந்த மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்தார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. இதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் ருத்ரதாண்டவம் ஆடினார். சோதி ஓவரில் ஒருசிக்ஸர், பவுண்டரி, சவுதி ஓவரில் ஒரு சிக்ஸர் என ஸ்ரேயாஸ் அய்யர் விளாசினார்.

இதனால் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. பென்னட் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி, சவுதி வீசிய 19 ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க இந்திய அணி வெற்றியை நெருங்கியது. அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சவுதி வீசிய கடைசி பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஸ்ரேயாஸ் அய்யர் வின்னிங் ஷொட்டாக சிக்ஸருக்குஅடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 58 ரன்களிலும்(3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) , மணிஷ் பாண்டே14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
நியூஸிலாந்து தரப்பில் ஈஷ் சோதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியப் பந்து வீச்சு சொதப்ப, அதிரடி விளாசலில் நியூஸி.

ரொஸ் வென்ற இந்திய அணியின் கப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணியின் கப்தில் , முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினர்.

இருவரும் தொடக்கத்திலிருந்தே இந்திய வீரர்களின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

முன்ரோவும் , கப்திலும் அடித்து நொறுக்கியதால் பவர்ப்ளேயில் 68 ரன்களைச் சேர்த்தது நியூஸிலாந்து .

பவர்ப்ளேயில் இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து அடிக்கும் அதிகபட்சமான ஸ்கோர் இதுவாகும்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்த நிலையில், கப்தில் 30 ரன்னில் துபே பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கப்தில் ரன் கணக்கில் ஒரு சிக்ஸர் , 4 பவுண்டரி அடங்கும்

அடுத்துவந்த கப்டன் வில்லியம்ஸன், முன்ரோவுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்தபின் ரன் சேர்க்கும் வேகம் கூடியது. வில்லியம்ஸன் ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸர் விளாசி ஸ்கோரை எகிறச் செய்தார். முன்ரோ 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

தாக்கூர் வீசிய 12 வது ஓவரில் ஸ்கொயர் லெக்திசையில் சாஹலிடம் கட்ச் கொடுத்து முன்ரோ 42 பந்துகளில் 59 ரன்களில் வெளியேறினார். இதில் 2 சிக்ஸர், 6பவுண்டரிகள் அடங்கும். அடுத்து கோலின் டி கிராண்ட்ஹோம் வந்த வேகத்தில் ஜடேஜா பந்துவீச்சில் துபேயிடம் கட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

4 வது விக்கெட்டுக்கு வந்த ரோஸ் டெய்லர், வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்துதான் இந்தியப் பந்துவீச்சை பிற்பகுதியில் நொறுக்கி அள்ளினர். 13 வது ஓவர் வரை நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளுக்கு 117 ரன்களே சேர்த்திருந்தது. ஆனால், இருவரும சேர்ந்து 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தனர்.

குறிப்பாக ஷமி வீசிய 16 வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 22 ரன்களைச் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார் டெய்லர். கடந்த 6 ஆண்டுகளில் டி20 போட்டியில் டெய்லர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். அதைத் தொடர்ந்து வில்லியம்ஸனும் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து 24 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்தனர்.

சாஹல் வீசிய 17 வது ஓவரில் கோலியின் கட்சுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்து 26 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். அடுத்து வந்த செய்ஃபர்ட் ஒரு ரன் சேர்த்த நிலையில் பும்ரா பந்தவீச்சில் ஆட்டமிழந்தார்

டெய்லர் 27 பந்துகளில் 54 ரன்களுடனும் ,(3 சிக்ஸர், 3 பவுண்டரி) சான்ட்னர் 2 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் . 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் 203 உடன் முடிந்தது நியூஸிலாந்து. இல்லையெனில் மேலும் ரன்களை எட்டியிருக்கும்.

இந்தியத் தரப்பில் பும்ரா, சாஹல், தாக்கூர், ஜடேஜா, துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

2வது ரி20 போட்டி வரும் 26ம் திகதி ஒக்லாந்தில் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here