சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!


சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

66 வயது ஆண் ஒருவருக்கு அந்த பாதிப்பு இருப்பது நேற்று (23) உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடைய 37 வயது மகனையும், 53 வயது பெண் ஒருவரையும் அந்தக் கிருமி தொற்றி இருந்ததைச் சுகாதார அமைச்சு இன்று உறுதி செய்தது.

இந்த மூவருமே சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள்.

தந்தை-மகன் இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் அந்தப் பெண் தேசிய தொற்றுநோய் மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அம்மூவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் புதுவகை கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்று முதல் 78 வயதுக்குட்பட்ட 44 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவர்களில் 13 பேருக்கு அந்தக் கிருமித்தொற்று இல்லை என்பதும் மூவர் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதியானது.

பாதிக்கப்பட்ட மூவருக்கும் நெருக்கமானவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தக் கிருமித்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது.

ஆயினும், சீனாவில் இருந்து அதிகமான பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதால் கிருமித்தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 21ஆம் திகதி சிங்கப்பூரை வந்தடைந்த அந்த 53 வயதுப் பெண்ணுக்கு 24 மணி நேரத்திற்குள்ளேயே காய்ச்சல் கண்டது.

ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற அவர், பின்னர் டான் டோக் செங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.

அவருடன் இன்னொருவரும் சிங்கப்பூர் வந்ததாகவும் அவர்கள் டௌன்செண்ட் சாலையில் உள்ள ஜே8 ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது.

உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன் அந்தப் பெண் பொதுப் போக்குவரத்து மூலம் ஆர்ச்சர்ட், மரீனா பே சேண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட 66 வயது ஆண் கடந்த 20ஆம் திகதி சிங்கப்பூர் வந்தார். அவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக 46 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் 24 பேர் ஏற்கெனவே இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.

“பாதிக்கப்பட்டவரிடமிருந்து 2 மீ. தொலைவிற்குள், கிட்டத்தட்ட அரை மணி நேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் இருந்தவர்கள் நெருங்கிய தொடர்புகொண்டவர்களாகக் கருதப்படுவர்” என்றார் தொற்றுநோய்கள் பிரிவின் இயக்குநர் வெர்னன் லீ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here