சப்-இன்ஸ்பெக்டர் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்பு!

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவது என தெரியவந்து உள்ளது.

களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ந் தேதி காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபீக் ஆகியோர் கடந்த 14ந் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர்கள்.

கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவர் மீதும் போலீசார் உபா சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர். கடந்த 21ந் தேதி இவர்கள் இருவரையும் போலீசார் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் போலீசார் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். எஸ்.பி. ஸ்ரீநாத் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரித்தார்.

அப்போது எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தியை எங்கே? மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டனர். முதலில் இதற்கு பதில் சொல்லாமல் இருந்த அப்துல் சமீம், தவுபீக் இருவரும் பின்னர் தொடர்ச்சியான விசாரணைக்கு பிறகு கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

அப்துல் சமீம், தவுபீக் இருவரும் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை சம்பவம் நடந்த களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்து கேரளா வழியாக பஸ்சில் தப்பிச் செல்லும் வழியில் வீசி விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார், அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் நேற்றிரவே நாகர்கோவிலில் இருந்து கேரளா அழைத்துச் சென்றனர்.

எர்ணாகுளம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீர் ஓடையில் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை பயங்கரவாதிகள் வீசி இருந்தனர். பயங்கரவாதிகள் அந்த இடத்தை போலீசாரிடம் அடையாளம் காட்டினர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன் கழிவு நீர் ஓடையில் வீசப்பட்டிருந்த துப்பாக்கியை போலீசார் தேடிக் கண்டுபிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி 7.65 எம்.எம் ரகத்தைச் சேர்ந்தது. அந்தத் துப்பாக்கியை மீட்கும் போது அதில் ஐந்து தோட்டாக்கள் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

துப்பாக்கியில் மேட் இன் இத்தாலி எனக் குறிப்பிடப்படுள்ளது. அது ராணுவத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here