சாதிப்பிரச்சனையாம்: புலிகளின் பாதையை மூடிய ஆலய நிர்வாகம்; மக்கள் அந்தரிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முதலாம் வட்டாரம் உலகளந்த பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள 25 குடும்பங்களின் போக்குவரத்து பாதையை மறித்து, ஆலய நிர்வாகம் வேலியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த குடும்பங்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி இருந்த காலத்தில், அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீதியால் மக்கள் போக்குவரத்து செய்தனர். 30 வருடங்களிற்கும் மேலாக இது அவர்களின் போக்குவரத்து பாதையாக உள்ளது. இந்த நிலையில் திடீரென, பாதையை மறித்து வேலியிட்டுள்ள ஆலய நிர்வாகம், “ஆலய வளாகம்“ என்றும் எல்லையிட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் 25 குடும்பங்களை சேர்ந்த 40 இற்கும் அதிக மாணவர்கள், தொழிலில் ஈடுபடுபவர்கள், இதர தேவைகளிற்காக வெளியில் செல்பவர்கள் போக்குவரத்து பாதையின்றி பெரும் அவலத்தை சந்திக்கிறார்கள். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், பிரதேசசபை உறுப்பினர்களிடம் மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து மக்கள் கடந்த வியாழக்கிழமை பொலிஸில் முறையிட்டனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பொலிசார், வேலியடைப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.  எனினும், ஆலய நிர்வாகம் அதை ஏற்க மறுத்து, அருகிலுள்ள குளப்பகுதியை வீதியாக பாவிக்குமாறு கூறியுள்ளது.

தாங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள், அதனாலேயே வீதியை மறித்து வேலியிடுகிறார்கள் என அந்த மக்கள் குற்றம்சுமத்துகிறார்கள். அரச நிர்வாகமும் ஆலய நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பில் வடக்கு முதலமைச்சரிடம் முறையிடவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here