இங்கிலீஷ் பிரிமியர் லீக்: 2 நிமிடத்தில் ஏமாந்த எவர்ட்டன்!

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி இரண்டு நிமிடங்களில் தோல்வியின் விளிம்பிலிருந்து நியூகாசல் அணி தப்பிப் பிழைத்தது.

ஆட்டத்தின் மேலதிக நேரம்வரை நியூகாசல் அணி 0-2 என பின்தங்கியிருந்து, தோல்வியடையும் நிலையில் இருந்தது.

ஆனால், மாற்று ஆட்டக்காரராக நியூகாசலுக்கு களமிறங்கிய ஃபிளோரியன் லெஜுயுன் 94ஆம் நிமிடத்தில் எவர்ட்டன் அணியின் தற்காப்பு வீரர்களின் அசட்டையை துல்லியமாக கணக்கிட்டு, அந்தரத்தில் ஒரு டைவ் அடித்து, பலமாக பந்தை உதைக்க, செய்வதறியாது தவித்த எவர்ட்டன் கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்ஃபர்ட்டை தாண்டி பந்து கோல் வலைக்குள் சென்றது.

அதைத் தொடர்ந்து அடுத்த நிமிடத்திலேயே ஃபிரீகிக் வாய்ப்புக்குப் பின் பந்தை சரிவர கோல் எல்லைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த எவர்ட்டன் தவறியது.

அதைப் பயன்படுத்தி லெஜுயுன் மீண்டும் பந்தை கோல் நோக்கி உதைக்க நியூகாசலுக்கு இரண்டாவது கோல் விழுந்தது.

அதுவரை நன்றாக விளையாடி வெற்றி பெறும் நிலையிலிருந்த எவர்ட்டன் இந்த இரண்டு கோல்களால் ஆட்டத்தை 2-2 என முடித்துக் கொண்டது.

இதற்கு முந்தைய ஆட்டத்திலும் கூடுதல் நேரத்தில் கோல் போட்டு ஆர்சனலுடனான ஆட்டத்தை நியூகாசல் அணி சமன் செய்திருந்தது.

கீழ்நிலைக்குச் செல்லக்கூடிய குழுக்களின் பட்டியலிலிருந்து தப்பிப் பிழைத்த நியூகாசல் குழுவின் நிர்வாகி ஸ்டீவ் புருஸ், “இது அபாரமான முடிவு. இந்தப் போட்டியில் எனது வீரர்களை நான் குறைசொல்ல முடியாது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், நாங்கள் விடாது முயற்சி செய்தோம். காற்பந்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இந்த ஆட்டமே சாட்சி.

இது ஒரு நம்ப முடியாத விளையாட்டு, ஆனால் அபாரமான ஒன்று. போட்டி முடிந்து விட்டது என்று எந்த நிலையிலும் ஓய்ந்துவிடக்கூடாது என்பதற்கு இந்த ஆட்டமே சான்று” என்றார்.

மற்றோர் ஆட்டத்தில் முன்னணி வீரர் டாவிட் லுவிஸ் ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டாலும், எஞ்சிய பத்து வீரர்களைக் கொண்டு ஆர்சனல் அணி, செல்சியை 2-2 என சமன் செய்தது.

பெனால்டி எல்லைக்குள் செல்சியின் வீரரை தள்ளிவிட்ட டாவிட் லுவிஸை நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார்.

ஆனால், ஆர்சனலின் பெலரின் 87ஆம் நிமிடத்தில் தமது அணியின் சார்பாக கோல் போட்டு காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

வேறோர் ஆட்டத்தில் அண்மைய காலமாக முன்னேறி வரும் செளத்ஹேம்டன் அணி, கிறிஸ்டல் பலஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here