விவசாயியை மோதிக் கொன்ற மணல் உழவு இயந்திரம்: பொதுமக்கள் போராட்டம்!


மட்டக்களப்பு- கிரான் -கோராவெளி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உழவு இயந்திரம் மற்றும் சாரதி தலைமறைவாகியிருந்த வேளை அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு அவர்களைக் கைது செய்யும் வரை சடலத்தை அகற்றவிடாது போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிலிருந்து சற்று நேரத்தில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துவிச்சக்கர வண்டியில் வயலுக்குச் சென்று கொண்டிருந்த நபரை மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதிச் சென்றுள்ளதனால் தலைப்பகுதி முழுமையாகச் சிதைவடைந்து இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் – விஷ்ணு கோயில் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முத்துவேல் யோகநாதன் 67) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாழைச்சேனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அவ்வழியாகச் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த அனைத்து உழவு இயந்திரங்களும் நிறுத்தப்பட்டு பொலிஸாரின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here