ரஜினியின் அவதூறுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!


நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார். அவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் குறித்து அவதூறு கிளப்புவதாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவையில் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டது.

அதேபோன்று சென்னையிலும் பெரியார் பற்றிய பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்புவதாக ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு எதையும் போலீஸார் செய்யாததால் தனது புகாரின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here