ரெலோவின் வேட்பாளர்கள் யார்?: ஓரளவு இணக்கம் காணப்பட்டது!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) விரைவில் பொன் விழாவை கொண்டாடவுள்ளது. அடுத்த மாதம் 8 அல்லது 9ம் திகதிகளில் அந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (19) வவுனியாவில் நடந்த ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடியது. அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில், ரெலோவின் கிழக்கு பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

ரெலோவின் பொன் விழா ஏற்கனவே கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். எனினும், இயற்கை அனர்த்தங்களினால் அது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அடுத்த மாதம் 8 அல்லது 9ம் திகதியில் பொன்விழாவை கொண்டாடுவதென இன்று முடிவானது. சரியான திகதி வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும்.

இதேவேளை, பொன்விழா கொண்டாட்டங்களுடன், கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, நிர்வாகிகள் தெரிவும் இடம்பெறும்.

இன்றைய கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய ஆலோசனையும் இடம்பெற்றது. ஆரம்பத்திலேயே கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைபவர்கள், அடுத்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்தார்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில்- மன்னாரில் செல்வம் அடைக்கலநாதனும், முல்லைத்தீவில் வினோநோகராதலிங்கமும் களமிறங்கவுள்ளனர். வவுனியாவில் பொருத்தமான ஒருவரை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்- கோவிந்தன் கருணாகரம் (ஜனா) களமிறங்கவுள்ளார். மிக இளம் வயதில் எம்.பியானவர்களில் ஒருவர் என்ற சிறப்பிற்குரிய ஜனா, கடந்த ஒரு சில நாடாளுமன்ற தேர்தல்களில் மயிரிழையில் தோல்வியடைந்திருந்தார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ் அரசு கட்சியின் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் அவரிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இம்முறை வெற்றியடையும் வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் அவர் களமிறங்குகிறார். இதேவேளை, மட்டக்களப்பின் ரெலோவின் இன்னொரு முக்கியஸ்தரான இந்திரகுமார் பிரசன்னா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லையென தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருளாதார நிலைமை தனக்கில்லையென அவர் தெரிவித்தார். அதனால் அடுத்த மாகாணசபை தேர்தலில் அவர் போட்டியிடுவார்.

இன்றைய கூட்டத்தில் அம்பாறை எம்.பி கோடீஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

அம்பாறை மாவட்டத்தில்- கோடீஸ்வரன் களமிறங்குவதென தீர்மானிக்கப்பட்டது. எனினும், இன்றைய கூட்டத்தில் ஹென்ரி மகேந்திரன் கலந்து கொள்ளவில்லை. கோடீஸ்வரன் போட்டியிட்டால், அந்த பட்டியலில் தான் போட்டியிட மாட்டேன் என ஹென்ரி மகேந்திரன் ஏற்கனவே கட்சிக்கு அறவித்திருந்தார். அதை சிலர் சுட்டிக்காட்டினார்கள். அது அவருடைய பிரச்சனை, அவருக்கு வழங்கும் வாய்ப்பை பயன்படுத்துவதா இல்லையா என்பதை அவர் தீர்மானிக்கட்டும் என தலைமையால் சொல்லப்பட்டது. அத்துடன், மூன்றாவது இன்னொரு உறுப்பினரையும் களமிறக்க தீர்மானிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில்- கட்சியின் செயலாளர் நித்தியானந்தம் களமிறங்கப் போவதாக விருப்பம் தெரிவித்தார். எனினும், மூதூர் மற்றும் திருகொணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிறிதொருவரை களமிறக்கலாமென வேறு சிலர் தெரிவித்தனர். அது ஏற்கப்பட்டு, பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில்- யார் களமிறங்குவதென்ற இழுபறி நிலவுகிறது. கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேனை களமிறக்குவதென தலைமை முடிவு செய்திருந்தது. அதை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அறிவித்து விட்டார்கள். எனினும், யாழ் வேட்பாளர் இன்றும் தீர்மானிக்கப்படவில்லை, பலமான வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமென தலைமை வலியுறுத்தியது.

இதேவேளை, கட்சியின் யாழ் மாவட்ட பிரமுகர் விந்தன் கனகரட்ணமும் வேட்பாளராக களமிறங்கும் முஸ்தீபில் இருப்பதாக தெரிகிறது. சுரேன்தான் வேட்பாளர் என்ற தகவல் பரவியதையடுத்து, அதிருப்தியில் இன்றைய கூட்டத்தை தவிர்த்திருந்தார். கட்சி ஏற்கனவே முடிவெடுத்து விட்டு வருகிறார்கள், இந்தக் கூட்டத்திற்கு ஏன் வர வேண்டுமென அவர் கேள்வியெழுப்பியதாக ஒருவர் குறிப்பிட்டார்.

எனினும், அவர் கூட்டத்திற்கு வந்து தனது தரப்பு நியாயங்களை பேசியிருக்க வேண்டுமேன தலைமையால் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விந்தனையும் உள்ளடக்கியதாக யாழ் மாவட்ட கிளையை கூட்டி, யாழ் வேட்பாளரை தெரிவு செய்வதென முடிவானது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here