நடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்!

தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகை ரஷ்மிகாவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத சொத்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரஷ்மிகா மந்தனா. நடிக்க ஆரம்பித்து 4 வருட காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்ட ராஷ்மிகாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பொக்கலூரு கிராமம் ஆகும்.

இந்த நிலையில் ரஷ்மிகா அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான புகார்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் சென்றன. இதையடுத்து நேற்று காலை 7.30 மணியளவில் வாடகை கார்கள் மூலம் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாருடன் விராஜ்பேட்டையில் உள்ள நடிகை ரஷ்மிகாவின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது ரஷ்மிகாவின் குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். நடிகை ரஷ்மிகா படப்பிடிப்புகாக வெளியூர் சென்றுவிட்டதால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. தொலைபேசி இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனர். மேலும் ரஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் இருந்த செல்போன்களையும் அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர்.

அதையடுத்து வீட்டில் இருந்த ஒவ்வொரு அறைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த நகைகள், ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நடிகை ரஷ்மிகா நடிப்புத் தொழிலில் மட்டுமல்லாது, விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் விராஜ்பேட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை தொடங்க முயன்று வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. மேலும் விராஜ்பேட்டையில் உள்ள ரஷ்மிகாவுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று மாலை வரை 2 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 இடங்களிலும் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here