சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!

நிக்கரவெட்டிய, கொட்டவெர பகுதியில் சிறுமியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதானவர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நிக்கரவெட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில தினங்களின் முன்னர் சிறுமியொருவரை இரண்டு பெண்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்கிய வீடியோ இணையத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது. இதையடுத்து, தீவிர விசாரணையில் இறங்கிய பொலிசார், நிக்கிரவெட்டிய, கோட்டவெரவில் வசிக்கும் நில்மினி ரத்ன குமாரி (30) அவரது சகோதரி மானெல் ரத்ன குமாரி (35) மற்றும் சிறுமியின் தந்தை ஜமால்தீன் அப்துல் ரோஷன் (40) ஆகியோரை கைது செய்தனர்.

நில்மினி ரத்ன குமாரி கிராமசேவகர் ஆவார். அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இன்று மீளவும் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவர்களை பிணையில் விடுவிப்பதால் அந்த பகுதியில் மக்கள் கொதிப்படைவார்கள், அதனால் பிணை வழங்க வேண்டாமென பொலிசார் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஹுசைர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது என்பதால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here