கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் திட்டமானது மேலும் விரிவுப்படுத்தப்பட்டு விடுபட்ட கிராமங்கள் உள்வாங்கப்பட்டு விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்ணைப்புக் குழுவின் தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த வாரம கொழும்பில் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற உயர் மட்ட கலந்துரையாடலின் போது இத் தீர்மானம் மேற்கொளளப்பட்டுள்ளது.
அந்த வகையில் செருக்கன் குடியிருப்பு, காஞ்சிபுரம், வடக்கச்சியில் அழகாபுரி, பத்துவீட்டுத்திட்டம், புதுக்காடு, கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்தி கிராமம் போன்ற பிரதேசங்கள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், மக்களுக்கான சுத்தமான குடிநீர் மற்றும் வறட்சியான காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் என்பவற்றை கருத்தில் கொண்டு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான பணிப்புரையை அமைச்சர் வாசுதேவ நாணக்கார அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார்.
அத்தோடு குடிநீருக்காக நீரை சுத்திகரித்து பெற்றுக்கொள்ளும் நிலையத்தின் தற்போதைய கொள்ளலவு போதுமானதாக இல்லாமையினால் அதனையும் மேலும் விரிவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் நாட்களில் நாளொன்றுக்கு அதிகளவான சுத்திகரிக்கப்பட்ட நீரை பெற்றுக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.
கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உமையாள்புரம், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, கிளிநகர், கல்லாறு, மலையாளபுரம், கல்மடுநகர், இயக்கச்சி வியாகபுரம், கொற்றான்ரர்குளம், ஆனைவிழுந்தான், கரியாலைநாகபடுவான், ஜெயபுரம், பல்வராயன்கட்டு, புன்னைநீராவி, உழவனூர், நாதன் குடியிருப்பு, அறிவியல்நகர், பொன்னநகர், பாரதிபுரம், கிராஞ்சி, பொன்னாவெளி, கிருஸ்ணபுரம்,செல்வாநகர், அம்பாள் குளம், கோணாவில், ஊற்றுப்புலம், தம்பகாமம், புதுமுறிப்பு, அம்பாள் நகர் போன்ற கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்படுகி்ன்றன.
கடந்த வாரம் இது தொடர்பாக இடம்பெற்ற அமைச்சின் செயலாளர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள், வடக்கு மாகாண நீர் வழங்க்ல் வடிகாலமைப்பு சபையின்உயரதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.