தமிழ் பக்க செய்தியின் எதிரொலி: வவுனியா பண்ணையில் தேடுகிறார்களாம்!

வவுனியா அரச விதைப்பண்ணையில் நடந்த மோசடிகளை தமிழ்பக்கம் அம்பலப்படுத்தியதையடுத்து, அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன்.

வவுனியா அரச விதைப்பண்ணையில் பெருமளவு மோசடிகள் நடைபெற்றிருந்தன. இந்த மோசடியையும் அதிகாரிகளும் கண்ணைமூடிக்கொண்டு அனுமதித்து வந்தனர். இதனால் இலாபத்தில் இயங்கியிருக்க வேண்டிய பண்ணை, மிகப்பெரும் நட்டத்தில் இயங்குவதாக கணக்கறிக்கை காண்பிக்கப்பட்டு வந்தது.

வவுனியா விவசாயத்துறை வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், அதை சரிசெய்ய மத்திய விவசாய அமைச்சிலிருந்து சகலா பானு என்ற அதிகாரியையை வடக்கு விவசாய அமைச்சு அழைத்திருந்தது. எனினும், இதற்கு அங்குள்ள மக்களையும், பணியாளர்களையும் அதிகாரிகள் சிலர் தூண்டிவிட்டு குழப்பங்களில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வில் பெருமளவு மோசடி அம்பலமானது.

நேற்று வவுனியா தாண்டிக்குளம் அரச விதைப்பண்ணையில் நடந்த நிகழ்வொன்றில் விவசாய அமைச்சர் கலந்துகொண்டிருந்தார். இதன்பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

“அரசவிதை உற்பத்தி பண்ணையில் மோசடி நடந்ததாக ஊடகம் ஒன்றின் வாயிலாகவே அறிய முடிந்தது. இது தொடர்பாக கணக்காய்வு செய்யுமாறு எமது திணைக்களத்திற்கு உததரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணைகள் முடிந்ததன் பின்னரே அடுத்த கட்டம் குறித்து சிந்திக்கலாம்“ என்றார்.

எனினும், கணக்காய்வு நடவடிக்கைகள் முடிவடைந்து, அங்கு நடைபெற்ற மோசடிகளை பட்டியல்படுத்தி விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு விட்டதென்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

இதேவேளை, பண்ணை முகாமையாளரால் அங்கு பணியாளர்கள் நெருக்கடியை சந்திப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அங்கு மோசடிகள் நடந்தன என்பதை கணக்காய்வு அறிக்கைகள் உறுதிசெய்ததன் பின்னரும், முகாமையாளர் அத பதவியிலேயே நீடிக்கிறார். தனக்கெதிராக வாக்குமூலம் அளித்தவர்களை பண்ணை முகாமையாளர் அச்சுறுத்துவதாக ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அண்மைநாட்களில் அப்படியான இருவர் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். அலுவலகத்தில் தரித்து விடப்பட்ட அவர்களின் மோட்டார்சைக்கிள்களில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

வலுவான ஆதாரங்களுடன் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தபோதும், அவர் பாதுகாக்கப்பட்டு, தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது விவசாய அமைச்சின் மீதான கடுமையன விமர்சனத்தை பல தரப்பிலிருந்தும் ஏற்படுத்தியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here