பொலார்டும், பிராவோவும் 400 எண் கொண்ட ‘ஜெர்சியை’ ஏன் அணிந்தார்கள் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் க்ரான் பொலார்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ ஆகியோர் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை (ஆடை) ஏன் அணிந்தார்கள் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் 2 இலக்கம் எண்கள் கொண்ட ஜெர்சிகளையே அதிகமாக அணிவார்கள். அதிலும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டுமே 3 இலக்க எண்களை அணிவார்கள். சில வீரர்கள் ஜெர்சி எண்ணை தங்களின் ராசியாக எடுத்துக்கொண்டு அதை மாற்றாமல் விளையாடுவார்கள்.

இந்நிலையில், 11-வது ஐபில் சீசனில் மும்பையில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டிவைன் பிராவோவும் 400 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார்கள்.

இது ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது, இருவரும் ஏன் 400 எண் கொண்டஜெர்சி ஏன் அணிந்தார்கள் என்று கேள்வி எழுப்பிக்கொண்டனர். ஒருவேளை இருவரும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் என்பதால் ஒரே மாதிரி எண் கொண்ட ஜெர்சியை அணிந்தார்களா என்றும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒருவிக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்த வெற்றிக்கு பின் ஆட்ட நாயகன் விருது பெற்ற டிவைன் பிராவோவிடம் இது குறித்து ஊடகத்தினர் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:

”நானும், பொலார்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இருவரும் இப்போது வெவ்வேறு அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இருவருக்கும் டி20 போட்டியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

டி20யில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் பொலார்ட் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது. அதேபோல ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு லீக், மற்றும் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரும் நான்தான்.

இந்த சாதனையை குறிப்பிடவே நாங்கள் இருவரும் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்தோம். அதன்படி முதல் போட்டியில் அதுபோல் அணிந்து விளையாடினோம்.

எனக்கும், பொலார்டுக்கும் இந்த சாதனை என்பது மிகப்பெரிய மைல்கல்லாகும். இது தொடர்பாக பொலார்டும் அவரின் அணி நிர்வாகத்தில் பேசினார். நானும் பேசி இந்த முடிவெடுத்தேன்.

30 வயதுக்கு மேல் செல்லும் போது உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். நான் காயத்தில் இருந்து மீண்டும் வந்து நீண்ட நாட்களுக்குப் பின் அணியில் இடம் பிடித்துள்ளேன். எனக்கு 24 வயது கிடையாது. ஆதலால், எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என்பதால், தொடக்கத்தில் மெதுவான ஆட்டத்தை விளையாடி அதன்பின் அதிரடியாக பேட் செய்தேன். வீரருக்கு உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம்.

என் மீது கேப்டன் தோனி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், அதற்குரிய இடத்தையும் சிஎஸ்கே அணியில் எனக்கு கொடுத்துள்ளார். சிஎஸ்கே அணியில் என்னுடைய பங்கு என்பதே, ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதுதான். அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.” இவ்வாறு பிராவோ தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here