பழைய பாலத்தின் மேலாக கார்ப்பெட் போடப்பட்டது!


காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி வீதியிலுள்ள மிகவும் பழைய பாலம் இருக்கத்தக்கதாக புதிதாக கார்ப்பட் வீதி அமைக்கப்பட்டுவருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கிநிதியுதவியுடன் ‘ஜ’ திட்டத்தின் கீழ் இப்பழைய பாலத்தை புதிதாக திருத்தியமைப்பதற்கு திட்டம் இல்லையெனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விபுலாநந்த மத்திய கல்லூரிக்கு முன்னாலுள்ள வீதிக்கு முன்பதாக வடிகான் திட்டமில்லையென்றும் கூறப்பட்டுள்ளது.

இவ் வீதியை தினமும் பாடசாலை மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடலுக்குச் செல்வோரும் இவ்வீதியால்தான் பயணிக்கின்றனர். இத்திட்டத்திற்கு பொறுப்பான கிழக்கு மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே.பத்மராஜா இது விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமென காரைதீவு ஊர்ப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக புதிய பாலம் கட்டாயம் அமைக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

சிறு கூட்டமொன்று ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடாத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காரைதீவு தவிசாளரோ ஏனைய முக்கிய பிரமுகர்களோ அழைக்கப்படவில்லை. எனவே மக்களது பூரண கருத்தறியப்படாமல் இப்பாரிய வீதி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது முறையா என மக்கள் வினவுகின்றனர்.

குறித்த கரைச்சைப்பாலம் எப்போதும் விழலாம் என்ற நிலையிலிருப்பதை கடந்த காலங்களில் பல தடவைகள் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் இப்பாலம் புனரமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிப் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை நேரடியாக வந்து பார்வையிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மிகவும் பதிவாக இருக்கின்ற இப்பால மட்டத்தில் தற்போது ஆற்று வாழைகள் நிரம்பி வெளியே வரவுள்ள நிலையிலுள்ளது. எனவே 2 அடிக்காவது உயர்த்தி முறையாக முழுமையான வீதி அபிவிருத்தியை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்த்துள்ளனர்.
இந்த நிலையில் அகற்றப்பட வேண்டிய இப்பழைய பாலத்தை அப்படியே வைத்து கார்ப்பெட் வீதியை அமைப்பது அரசுக்கு மேலதிக செலவீனத்தை ஏற்படுத்தும் சதியாகவே பார்கப்படுகிறது.

வீதி அமைக்கப்பட்டபிற்பாடு பின்னர் பாலம் அமைக்கலாமா? இது இரட்டைவேலை என்பதுடன் மேலதிக செலவீனத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here