உனக்குள் கடவுளைத் தேடு; பொங்கல் பண்டிகைக்காக நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதைகள்; குவியும் பாராட்டு


மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன், பொங்கல் பண்டிகைக்காக கவிதை எழுதியுள்ளதைப் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் 1,500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ‘பட்டாம்பூச்சி விற்பவன்’, ‘அணிலாடும் முன்றில்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். ‘தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கும், ‘சைவம்’ திரைப்படத்தில் ‘அழகே அழகே’ பாடலுக்கும் சிறந்த பாடல்களுக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் நா.முத்துக்குமார்.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் நா.முத்துக்குமார் பெற்றுள்ளார். கட்டுரைகள், ஹைக்கூ கவிதைகள், ‘சில்க் சிட்டி’ என்ற நாவலையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். இந்நிலையில், 2016-ம் ஆண்டில் தனது 41-வது வயதில் நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், 7வது படிக்கும் ஆதவன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் வயதுக்கே உரிய பாணியில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அனைத்திற்கும் ஒவ்வொன்றாக கவிதை எழுதியுள்ளார்.

அவருடைய கவிதை வரிகள்:

போகி

நீ உன் ஆணவத்தை அன்பில் எரி!
இதைச் செய்பவனுக்கு வாழ்க்கை சரி!
கோயிலில் இருக்கும் தேரு!
பானையைச் செய்யத் தேவை சேறு!
வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு!
இல்லையென்றால் வீடு ஆகிடும் காடு!
தமிழரின் பெருமை மண்வாசனை!
இந்தக் கவிதை என் யோசனை…!

தைப்பொங்கல்

உழவர்களை அண்ணாந்து பாரு!
உலகத்தில் அன்பைச் சேரு!
அவர்களால்தான் நமக்குக் கிடைக்கிறது சோறு!
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்குப் பெரும் பாடு!
உழவர்கள் நமது சொந்தம்!
இதைச் சொன்னது தமிழர் பந்தம்!
பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்!
இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்…!

மாட்டுப் பொங்கல்

வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு!
நீ உன் வேட்டியைத் தூக்கிக் கட்டு!
கரும்பை இரண்டாக வெட்டு!
நீ உன் துணிச்சலுக்குக் கை தட்டு!
சிப்பிக்குள் இருக்கும் முத்து!
மாடு தமிழர்களின் சொத்து!
மாடு எங்கள் சாமி!
நீ உன் அன்பை இங்கு காமி…!

காணும் பொங்கல்

உறவினர்கள் வந்தார்களா என்று பாரு!
உலகத்தில் நல்ல நண்பர்களைச் சேரு!
நீ அழகாகக் கோலம் போடு!
உன் நல்ல உள்ளத்தோடு
நீ உனக்குள் கடவுளைத் தேடு!
இல்லையென்றால் நீ படுவாய் பாடு!
பெண்ணைக் கண்ணாகப் பாரு!
இல்லையென்றால் கிடைக்காது சோறு…!

சிறுவன் ஆதவனின் இந்தக் கவிதை வரிகளை சமூக வலைதளங்களில் பலரும் ஆதவனைப் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here