யாழ்.வலய இடமாற்றங்களில் பாரபட்சங்கள்; தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வோம்: ஜோசப் ஸ்ராலின்


யாழ்ப்பாண கல்வி வலயத்தில் நடைபெற்ற 7 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் பணியாற்றியவர்களுக்கான உள்ளக இடமாற்றங்களில் – பக்கச்சார்பான செயற்பாடுகளும், முறையற்ற செயற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மேன்முறையீடுகள் பல ஆசிரியர்கள் செய்துள்ள நிலையில் மேன்முறையீடுகளை சபை மூலம் பரிசீலிக்காத நிலையில் ஒரு சிலருக்கு மட்டும் மேன்முறையீடுகளுக்கு தனிப்பட்ட முறையிலேயே பக்கச்சார்பாக தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு இடமாற்றச்சபை தீர்மானங்களுக்கு அமைய பொதுவான நீதி பின்பற்றப்படவேண்டும். யாழ்.கல்வி வலயத்தின் பாரபட்சமான செயற்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் பலர் மனஉழைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.

இடமாற்றங்களை வழங்கிவிட்டு வலயக்கல்விப்பணிப்பாளர் நீண்ட விடுப்பில் உள்ளார். யாழ்.வலய கல்வி பணிமனைக்கு நிர்வாகத்துக்குப் பொறுப்பாக நீண்ட நாட்களாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை.

அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களினால் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக அலைக்கழிகின்றனர்.

கடமையிலுள்ள அதிகாரிகளோ ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தீர்வுகளை கூறி செயற்படுகின்றனர். இவ்வாறான பாரபட்சமான முறைகள் மேன்முறையீட்டு சபை கூடுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறான பாரபட்சமான அணுகுமுறையிலான இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

பாரபட்சமாக இடமாற்ற அணுகுமுறை தொடருமாயின் வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றங்கள் அனைத்துக்குமாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here