உயிரிழந்தவர்களிற்கு நீதி கிடைக்க பாடுபடுவேன்: உறவினர் முன் கனடிய பிரதமர்!

ஈரானிய பாதுகாப்பு தரப்பினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தில் இருந்த 176 பேர் உயிரிழந்திருந்தனர். கனடாவை சேர்ந்த 57 பேர் இதில் உயிரிழந்திருந்தனர்.

கனடியர்களின் இறப்புக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதையும், இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும் தாம் உறுதி செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

இதைக் கூறும்போது ட்ரூடோவின் குரல் தழுதழுத்திருந்தது.

ஒரே சம்பவத்தில் இந்த எண்ணிக்கையிலான கனடியர்கள் இறந்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது.

“நீங்கள் ஆற்றொணாத் துயரத்தில் தனித்து நிற்பதாக எண்ணலாம். ஆனால், நீங்கள் தனியாக விடப்படவில்லை. இந்த நாடே இன்றல்ல, நாளையல்ல, இனி வரும் காலங்களிலும் உங்களுக்கு துணையாக நிற்கும்” என்று அல்பர்ட்டா மாநிலத்தின் எட்மண்டன் நகரிலுள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கூடியிருந்த சுமார் 2,300 பேரிடம் தமது துயரத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அவர் பேசிய இடத்தில் கறுப்பு நிற சட்டத்துடன் கூடிய இறந்தவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

“இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கவே கூடாது. இந்த அசாதாரணமான, சிரமமான காலகட்டத்தில் என் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

இந்த விமான விபத்து வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட மனிதத் தவறால் நிகழ்ந்துள்ளது என்று அல்பர்ட்டா மாநில பிரதமர் ஜேசன் கென்னி வர்ணித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here