தமிழர்கள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்களா?

வடக்கு மாகாண நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது டெனீஸ்வரன் விவகாரம். வடமாகாணசபை நிர்வாகத்தை தமிழர்கள் சரியாக நடத்தவில்லையென்ற விமர்சனம் மீளவும் உறுதியாகியுள்ளது. மேலோட்டமான பார்வையில் இந்த குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் மீது சுமத்துகிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. விக்னேஸ்வரனிற்கும் அப்பால், பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் பலருள்ளனர். இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், விக்னேஸ்வரனை விட அதிகமாக, மாகாணசபை குழப்பங்களிற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள்.

வடமாகாணசபையின் அத்தனை குழப்பங்களும், ஒரு புள்ளியிலிருந்தே புறப்பட்டன. அது- தமிழரசுக்கட்சி எதிர் விக்னேஸ்வரன் என்பதே.

முதலமைச்சரை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன், வடக்கு அமைச்சர் ஐங்கரநேசனை குறிவைத்து தமிழரசுக்கட்சி அணி மாகாணசபைக்குள் செயற்பட ஆரம்பித்தபோதே, மாகாணசபைக்குள் சிக்கல் ஆரம்பித்தது.

தமிழரசு அணி, தாமே இந்த விவகாரத்தை கையிலெடுக்காமல் வவுனியா உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனை வளைத்துப்போட்டு, அவர் மூலம் ஐங்கரநேசனிற்கு எதிரான பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார். ஐங்கரநேசன் பதவி விலகினால், விவசாய அமைச்சராக லிங்கநாதனை நியமிக்கலாமென தமிழரசுக்கட்சியினர் கொடுத்த வாக்குறுதியை நம்பி, லிங்கநாதன் இந்த விடயத்தை கையிலெடுத்தார்.

தமிழரசுக்கட்சியின் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சாணக்கியமும், “நரி மூளை“யும் முதலமைச்சரிடம் அப்பொழுது அறவே கிடையாது என்ற உண்மையையும் (இப்பொழுதும் அவ்வளவாக தேறவில்லை) குறிப்பிட்டே ஆக வேண்டும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒரு விசாரணைக்குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையே இப்போதைய குழுப்பங்களிற்கு காரணம்.

முதலமைச்சரை பலவீனப்படுத்துகிறேன் என மாகாணசபைக்குள் முயன்ற தமிழரசுக்கட்சி, கண்ணுக்கு கண் என அவர்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்த பதில் நடவடிக்கை எடுத்த முதல்வர் என, இந்த சர்ச்சைதான் இந்த குழப்பத்தின் அடிநாதம்.

டெனிஸ்வரன் ரெலோ தரப்பிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஆனால் பின்னர் ரெலோ முகாமிற்கு வெளியில் வந்து அரசியல் செய்ய, கட்சிக்கு அவரது நடவடிக்கை ஒவ்வாமையாக, அவரை நீக்கும்படி கட்சி முதலமைச்சரிடம் கோரியது.

ஐங்கரநேசனை கழற்ற தமிழரசுக்கட்சி முயற்சிக்க, கழற்றுவதென்றால் உங்களின் ஆட்களையும் சேர்த்தே கழற்றுவேன் என்பதே- நான்கு அமைச்சர்கள் பதவி நீக்கத்தின் பின்னணி அரசியல்.

முதலமைச்சரிற்கு எதிரான நகர்விற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பாவிக்க வேண்டுமென்ற தமிழரசுக்கட்சியின் அரசியல் நகர்வில் டெனீஸ்வரன் இணைக்கப்பட்டு, அவருக்கான சட்ட உதவிகள் தமிழரசுக்கட்சி முகாமிலிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இனப்பிரச்சனைகான தீர்வாக தென்னிலங்கையால் அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை பல குறைபாடுகளை கொண்டது. தமிழர்- சிங்களவர் என்ற இரண்டு தேசிய இனங்களிற்கிடையிலான முரண்பாட்டால் எழுந்த தேசிய இனப்பிரச்சனையை, இலங்கையின் மாகாண நிர்வாகங் எல்லைகளிற்குள் சுருக்கும் முயற்சியே மாகாணசபை முறைமை. தமிழர்களின் கோரிக்கைகளிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல், ஒட்டுமொத்த இலங்கையையும் மாகாண வலயங்களாக பிரித்து, மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுனரின் கட்டுப்பாட்டில் மாகாணங்களை இயங்க வைத்துள்ளதே 13வது திருத்தம்.

13வது திருத்தத்தின் மூலம் ஒரு பியூனை கூட தன்னால் நியமிக்க முடியவில்லையென பிள்ளையான் தனது பதவியின் இறுதியில் குறைப்பட்டார்.

இனப்பிரச்சனையை மாகாண நிர்வாக எல்லைக்குள் சுருக்கிய அரசாங்கத்தின் முயற்சியை, சிந்தனையளவிலும் செயலளவிலும் தமிழர்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை. மாகாண நிர்வாகத்தின் அதிகாரமற்ற தன்மையை குறிப்பிட்டு அதற்கு எதிராக போராட வேண்டிய தமிழர்கள், அந்த சட்டபிரிவொன்றின் துணையுடன் தமக்குள் குழிவெட்டிக் கொள்கிறார்கள்.

மாகாண அமைச்சு பதவியில்லாவிட்டால் தனது அரசியல் எதிர்காலம் பூஜ்ஜியமாகி விடும் என டெனீஸ்வரன் அச்சப்படுகிறார். அடுத்தமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அவருக்கு ஆசனம் கிடைப்பது குதிரைக்கொம்பு. தமிழரசுக்கட்சி ஒரு வாக்குறுதியளித்திருந்தபோதும், ரெலோ அதை அனுமதிக்கப் போவதில்லை.

டெனீஸ்வரனின் பதவி தேவையை தமிழரசுக்கட்சி கச்சிதமாக பாவித்துள்ளது. முதலமைச்சரின் முன்யோசனையற்ற முடிவு, டெனீஸ்வரனிற்கு வாய்ப்பாகியுள்ளது. அவ்வளவே, இதில் தமிழர்களிற்கு என்ன இலாபமிருக்கிறது?

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here